வந்தே பாரத், சதாப்தி ரயிலில் போறீங்களா? தண்ணீர் பாட்டிலில் வந்த திடீர் மாற்றம்.. இனி இப்படித்தான்
சென்னை: வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னை சென்ட்ரல் - மைசூர் உள்பட பல முக்கிய நகரங்களுக்கு இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிவேகமாக செல்வதாலும், ஸ்டேஷன்களில் சில நிமிடம் மட்டுமே நின்று உடனடியாக கிளம்புவதாலும் பயணிகளால் வெளியே சென்று உணவு வாங்க முடியாது. இதனால் டிக்கெட் முன்பதிவின்போதே நம்மால் உணவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த முடியும்.
அதன்பிறகு ரயில் பயணத்தில் நம் இருக்கைக்கே உணவு வந்துவிடும். இந்த உணவோடு தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். ரயில் நீர் என்ற அந்த தண்ணீர் பாட்டில் 1 லிட்டர் அளவு கொண்டதாக இருக்கிறது. இந்நிலையில் தான் தண்ணீர் பாட்டில் வழங்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதாவது ரயிலில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பதில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது வந்தேபாரத், சதாப்தி ரயில்களில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கும்போது பயணிகள் அதனை முழுவதுமாக குடிப்பது இல்லை. பாதியளவு தண்ணீரை மிச்சம் வைத்து செல்கின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது.
இப்படி தண்ணீர் வீணாவதை தடுக்கவே ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி முதலில் ரயில் பயணிகளுக்கு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். அதனை முழுவதுமாக பயன்படுத்திய பிறகு பயணிகள் தேவையென்றால் இன்னொரு அரை லிட்டர் பாட்டில் தண்ணீரை கேட்டு பெற்று கொள்ளலாம். இதற்கு தனியாக பணம் செலுத்த தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வே சார்பில் தண்ணீரை சேமிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்த. அதன்படி 32 மறுசுழற்ச்சி மையங்கள் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் 158 இடங்களில் மழைநீர் சேமிப்பு யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது வந்தேபாரத் மற்றும் சதாப்தி ரயில்களில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பதில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications