தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த.. நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார்..!
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார்
சென்னை: இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன் காலமானார்.. அவருக்கு வயது 98. மறைந்த டாக்டர் சாரதா மேனனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சாரதா மேனன் நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்., மற்றும் எம்டி., படிப்பை முடித்தார்...
பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 1961ம் ஆண்டு கண்காணிப்பாளராக சேர்ந்த அவர், 16 ஆண்டுகள் பணிபுரிந்தார்...

மருத்துவமனைகள்
நோயாளிகளுக்கு வருடந்தோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து, அதன்மூலம் மருத்துவமனைக்கு நிதி திரட்டி தந்தவர் ஆவார்.. அதுமட்டுமல்ல, பணி ஓய்வுக்கு பிறகு, மனநோயாளிகளின் நல்வாழ்விற்காக 1984ம் ஆண்டு "ஸ்கார்ப்" என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் சாரதா மேனன் துவக்கி, மனநோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் இடவசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வந்தவர்.

விருதுகள்
2016ம் ஆண்டு அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருதுக்கான தங்கப்பதக்கத்தினை அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.. மேலும் பொன்னாடை அணிவித்து அவரை கெளரவித்தார்... பத்ம பூஷண் விருதையும் பெற்றவர் சாரதா மேனன்.. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.. இது மருத்துவ துறையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அவருக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்,இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் புகழாரம் சூட்டி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

சென்னை
மன நோயாளிகளின் சிகிச்சையில், மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது - சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் சாரதா மேனன் நிறுவி இயங்கி வருந்த 'மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் (SCARF)' பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மறைவு
சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications