சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களே..உங்களுக்கு உதவ தகவல் மையம்..கட்டணமில்லா தொலைபேசி
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 27ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
ஐயப்பனை தரிசனம் செய்ய நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்குச் சிறு வழிப்பாதை, பெரு வழிப்பாதை என அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடையை தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறக்கிறார். பின்னர் மாளிகைப்புறம் சன்னிதான மேல் சாந்திக்குக் கோயிலுக்கான சாவி மற்றும் திருநீறு வழங்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படியில் இறங்கிச் சென்று ஆளி நெருப்பு பற்றவைக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்குச் செல்வதற்காக பதினெட்டாம் படி திறக்கப்படுகிறது.

புதிய மேல் சாந்தி பொறுப்பேற்பு
சபரிமலை புதிய மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கண்ணூரைச் சேர்ந்த ஜயராமன் நம்பூதிரி, மாளிகைப்புற சன்னிதானத்துக்கு ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மேல்சாந்தியாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சபரிமலை புதிய மேல்சாந்தியின் கையை பிடித்து ஐயப்ப சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லும் தந்திரி ஐயப்பன் மூல மந்திரமும், பூஜை முறைகளையும் உபதேசிப்பார்.

மண்டல பூஜை காலம்
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நாளை அதிகாலை 4 மணிக்குப் புதிய மேல்சாந்தி ஜெயராமன் சபரிமலை திருநடையைத் திறந்து பூஜைகள் மேற்கொள்வார். அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணிவரை நெய்யபிஷேகம் நடைபெறும். டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதி மதியம் மண்டல பூஜையும் நடைபெறும். அன்று மாலை நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை நடை சாத்தப்படுகிறது.

தகவல் மையம்
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை இன்று முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 27 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தகவல் மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டி விளம்பரப் பலகை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications