உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் பலி.. 2 இயக்குநர்கள் கொண்ட விசாரணை குழு! 2 நாட்களில் அறிக்கை தர ஆணை!
சென்னை: உடல் பருமன் சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர், சென்னை மருத்துவமனையில் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க 2 இயக்குநர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன், அதிக உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். நேற்று முன் தினம் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய அடுத்த 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஹேமச்சந்திரன், தவறான சிகிச்சை காரணமாக இறந்துவிட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்ததில் சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவர், மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஹேமச்சந்திரனின் தந்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தார். "மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த சில நிமிடங்களில் என் மகன் இறந்துவிட்டான், எந்தச் சோதனையும் இல்லாமல் இப்படி செய்துவிட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனின் உறவினர்களிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது மருத்துவத்துறை. இவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தி, 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications