குப்பை மேடுகளில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்! - முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்குப் பெருகும் வரவேற்பு
காய்ந்து கட்டாந்தரையாகக் கிடந்த இடம், இன்று பொன்விளையும் பூமியாக மாறி இருக்கிறது. ஊரே சேர்ந்து குப்பைக் கொட்டி கொடிய நோய் பரப்பும் இடமாகக் கிடந்த புறம்போக்கு நிலம் இன்று பணம் சம்பாதிக்கும் விளைச்சல் நிலமாக விளைந்து நிற்கிறது.
சொன்னால் நம்ப முடிகிறதா?
'நம்பித்தான் ஆக வேண்டும்' என்கிறார்கள் திருச்சி மக்கள். அப்படி ஒரு அதிசய பண்ணையைத்தான் இந்தச் செய்தியில் படிக்கப் போகிறீர்கள்.

திரும்பிப் பார்க்க வைத்த திருச்சி
'திருச்சியை முன்னுதாரணமாகக் கொண்டு உங்கள் ஊரில் ஏன் செய்யக் கூடாது?' என்ற கேள்வி, இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் உங்கள் உள்மனதில் எழும். அதற்கு நாங்கள் அல்ல; திருச்சி கிராமத்து மக்களே சாட்சி.
அது சரி, இந்தக் கிராமம் எங்கே உள்ளது என்கிறீர்களா? நவலூர், குட்டப்பட்டுதான் அந்தக் கிராமம். இந்தக் கிராமத்தின் மூலம் தமிழ்நாட்டுக்குத் தரமான ஒரு வழியைக் காட்டியுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 'ஒரு பண்ணை, மாதம் ஒரு லட்சம்' என்ற இலக்குடன் இயங்கத் தொடங்கியுள்ளது, இங்குள்ள ஒருங்கிணைந்த பண்ணையம்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடந்திருக்கும் பசுமை மாற்றம் குறித்து அந்தக் கிராமத்தின் கவுன்சிலர் சுபாஷினி சண்முகத்திடம் பேசினோம்.
"பொதுவாகப் பஞ்சாயத்து இடங்கள் எல்லாம் மக்கள் பயன்படுத்தாத இடமாகத்தான் கிடக்கும். அங்க போய் பார்த்தால் குப்பைக் கூளமாகவே கிடக்கும். மக்கள் தங்களுடைய வீடு, தெருவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதைப்போல பொதுவான இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில்லை.
ஓர் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் அதை நாம் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி உபயோகப்படுத்துவதன் மூலம் நமக்கும் ஒரு நன்மை கிடைக்க வேண்டும். ஊராட்சிகளில் காலியாகக் கிடைக்கும் அந்த நிலங்களில் மரங்களை நடலாம். காய்கறித் தோட்டங்களை அமைக்கலாம். அதன்மூலம் பயன் கிடைக்கும். அப்படிச் செய்தால், மக்கள் அதை மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

குப்பை மேடு டு ஒருங்கிணைந்த பண்ணை
ஓர் இடத்தில் அதிகமான குப்பைகள் தேங்கும்போதுதான் அசுத்தம் ஏற்படும். அதன்மூலம் நோய்கள் பரவும். இப்படித் தோட்டங்களாக மாற்றுவதன் மூலம் இடம் குப்பையாகாது. நோய்ப் பரவல் என்பது முற்றிலும் தடுக்கப்படும். ஆகவே, அந்த மாதிரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து தோட்டங்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம்" என்கிறார்.
ஜூலி கிரேஸ் என்பவர் இந்த ஊரில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் பேசும்போது, "நாங்கள் இதுவரைக்கும் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில்தான் இருந்து வந்தோம். ஆனால், இப்போது இந்தத் தோட்டம் மூலம் சில வேலைகள் கிடைத்துள்ளன. அதன்மூலம் வருமானமும் கிடைக்கிறது. இதை மேலும் சிறப்பாக மாற்றினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்" என்கிறார்
இந்தத் திட்டத்துக்கு, 'ஒரு கிராமம், ஒரு பண்ணை, ஒரு மாதம், ஒரு லட்சம்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் பஞ்சாயத்தில் 2 அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் கரம்பைக்காடாகக் கிடந்த பூமியை அடையாளம் கண்டு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதற்காகத் தனியாக ஒரு திட்டத்தை உருவாக்கி அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து மட்டங்களிலும் பேசி அனுமதியைப் பெற்றுள்ளனர்.

ஒரு மாதம்; ஒரு லட்சம் வருமானம்
குட்டப்பட்டு கிராமத்தில் குப்பை மேடாகக் கிடந்த நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றி செயல்வடிவம் தந்துள்ளனர். இந்த 2 அரை ஏக்கர் நிலப்பகுதியின் ஒரு பகுதியில் கீரை சாகுபடி, மற்றொரு பகுதியில் குட்டை அமைத்து மீன் வளர்ப்பு. கூடவே, அப்படியே ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் வளர்த்து வருகின்றனர். இதனிடையே பூச்செடிகளை வளர்த்து அதையும் சந்தைப்படுத்துகின்றனர். இங்கு தேனி வளர்ப்பும் காளான் வளர்ப்பும் நடக்கிறது.
இதில் சிறப்பு என்னவெனில், மீன் பண்ணை அமைந்திருக்கும் இடத்துக்கு மேலாகவே கோழி கொட்டகையை அமைத்துள்ளனர். கோழியின் கழிவுகள் மீன்களுக்கு உணவாக மாற்றப்படுகின்றன.
"தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் இந்த மாவட்டம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களைக் கண்டறிந்து அதன்மூலம் ஊராட்சிக்கு வருமானத்தைப் பெருக்கக்கூடிய வகையில் சில திட்டங்களை முன்னெடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் இந்தப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்கிறார், பண்ணையில் ஒன்றிய மேற்பார்வையாளராகப் பணிபுரியும் மரகதவல்லி.

1000 ஏக்கர் இலக்கு; ஏக்கருக்கு ஒரு லட்சம் கணக்கு
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் பேசுகையில், ''இந்த மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கரில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற ஒருங்கிணைந்த பண்ணையம் தொடங்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, 'ஒரு மாதம் ஒரு லட்சம் வருமானம்' என்ற இலக்குடன் இந்தத் திட்டத்தை முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தொடங்கியுள்ளோம். ஒரு ஒன்றியத்துக்கு 14 என்ற கணக்கில் இப்பண்ணையை உருவாக்க உள்ளோம்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ''குப்பை மேடான இந்த நிலங்களை விளைநிலங்களாக மாற்றி வருகிறோம். ஒரே பண்ணையில் நாட்டு மாடுகள், நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் எனப் பலவற்றை சுயஉதவிக் குழுக்களின் உதவியுடன் வளர்த்து வருகிறோம்.
அந்த ஆடு, மாடுகள் வாராவாரம் சந்தைக்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன. இங்குள்ள பயிர்களுக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகள் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன" என்கிறார்.

மு.கருணாநிதி டு ஸ்டாலின்
குட்டப்பட்டு பண்ணையில் பல சுய உதவிக்குழுக்கள் சேர்ந்து வேலை செய்கின்றன. அதில் ஆளாளுக்கு வேலைகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. மீன் வளர்ப்பை ஒரு குழுவும் கீரை, காய்கறி விவசாயத்தை மற்றொரு குழுவும் பார்த்துக் கொள்கிறது. கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பும் தனித்தனியே பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஒரு திட்டம் மூலமாகப் பல பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும், புறம்போக்காகக் கிடந்த கேட்பாரற்ற நிலம் இன்று பலருக்கும் பயன்படும் நிலமாகவும் வருமானம் தரும் பூமியாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சியும் தனது வருமானத்தை மறைமுகமாகப் பெருக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுக்கள் மூலம் முதன்முதலாக புதிய தமிழகத்தை உருவாக்கிக் காட்டினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவர்தான் இத்திட்டத்தை இந்தியாவிலேயே தனித்தன்மையோடு செயல்படுத்திக் காட்டியவர்.
இன்று அதே வழியில், புதிய இலக்கு, புதிய நோக்கங்களுடன் ஒருங்கிணைந்த பண்ணையை அறிமுகப்படுத்தி, அரசுக்கு வருமானம் தரும் ஒரு திட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைத்திருக்கிறார். அரசின் இந்த முயற்சியை அரசியல் சார்பற்று அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications