கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்.. தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை என்ன?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஏதாவது வைரஸ் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பது கேரளாவில்தான். கொரோனாவுக்கு மத்தியில் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை பயமுறுத்தியது.
இந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. தண்ணீர் மூலம் பரவும் இந்த வைரஸின் தாக்கம் வயநாடு மாவட்டத்தில் அதிமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் உள்பட 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.-

நோரோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை சென்னை ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் கேரளாவில் பரவும் நோரோ வைரஸ் காரணமாக தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள்.

மாநில எல்லைகளில் பாதுகாப்பு
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ' கேரளாவில் நோரா வைரஸ் வந்திருப்பதாக தகவல் வந்தவுடன் தமிழக-கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுகிறது, அதற்கான மருந்துகள் தமிழகத்தில் தயாராக உள்ளது. எல்லை பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரயில் மற்றும் விமானம் மூலம் கேரளாவில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மருத்துவ முகாம்கள்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் 5000 மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டு, 6000-க்கும் மேற்பட்ட முகாம்கள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 750 இடங்களில் திட்டமிடப்பட்டு 1000-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

கொரோனா பரிசோதனை
மழைக்கால உபாதைகளில் இருந்து மக்களை காக்கவே இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. குடிசைப் பகுதிகளில் வீடுதோறும் ப்ளீச்சிங் பெளடர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மருத்துவ முகாம் மூலம் 3.5 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர், 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .

வன்னியர் உள்ஒதுக்கீடு
தமிழகத்தில் தற்போது 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications