சட்டசபையில் ஐ.பி.செந்தில்குமார் பேசியதை கவனிச்சீங்களா? ஸ்டாலினுக்கு அவர் சூட்டிய புதிய அடைமொழி!
சென்னை: சட்டசபையில் தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய அடைமொழி சூட்டி பேசினார்.
எல்லோரும் தளபதி, தாயுள்ளம் கொண்ட முதல்வர் உட்பட இன்னும் சில வார்த்தைகளை கூறி புகழ, ஐ.பி.செந்தில்குமாரோ ஸ்டாலினை 'மக்கள் தலைவர்' என்றும் தமிழகத்தில் நடப்பது 'மக்கள் தலைவரின் அரசு' எனவும் மீண்டும் மீண்டும் ரிப்பிட்டாக சொன்னார்.
இதனிடையே பழனி தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலுக்கு ஆடவர் கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஆணித்தரமாக முன் வைத்தார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தின் போது பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமார், கொடைக்கானலில் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி மட்டுமே உள்ளதாகவும் ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ இல்லாததால் கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும், பழனிக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

கொடைக்கானல்
இதனால் கொடைக்கானலில் புதிதாக ஆடவர் கலை அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுக்க முடியுமா என்ற வினாவை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தக் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் சீட்கள் காலியாக இருக்கும் புள்ளி விவரத்தையும் வெளியிட்டார். மேலும், கொடைக்கானலில் புதிய கல்லூரி அமைக்க சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

மக்கள் தலைவர்
இதனால் மீண்டும் பேசிய ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தரைப்பகுதியையும், மலைப்பகுதியையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்று அமைச்சர் பொன்முடிக்கு அட்வைஸ் தந்ததோடு, ஸ்டாலின் குறித்து புகழாரம் சூட்டிய போது 'மக்கள் தலைவர்' என்றும் 'இது மக்கள் தலைவரின் அரசு' எனவும் மீண்டும் மீண்டும் ரிப்பிட்டாக சொன்னார். ஸ்டாலினுக்கு சட்டசபையில் மக்கள் தலைவர் என்ற புதிய அடைமொழியை சூட்டியதன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.

ஐ.பி.செந்தில்குமார்
தனது பழனி தொகுதி சார்ந்த பிரச்சனைகளை கேள்வி நேரத்தின் போது தவறாமல் எழுப்பும் வழக்கம் கொண்டவர் ஐ.பி.செந்தில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானலில் ஆடவர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார் என்பது அவரது அவை நடவடிக்கைகளின் மூலம் அறிய முடிகிறது.












Click it and Unblock the Notifications