ஐபிஎல் 2024.. சென்னை போட்டியை பார்க்க போறீங்களா.. மாநகர பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதாவது, கிரிக்கெட் போட்டியை காண செல்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 17-வது சீசன் நாளை தொடங்குகிறது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஐபிஎல் சீசனும் தொடங்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் இந்த முறை ஆன்லைனிலேயே விற்பனை செய்யப்பட்டது.
டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் பெருமளவு விற்று தீர்ந்து விட்டன. அந்த அளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, கிரிக்கெட் போட்டியை காண செல்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரம் வரையிலும் டிக்கெட்டை காண்பித்து சேப்பாக்கத்தில் இருந்து இலவசமாக மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏசி பேருந்தில் பயணிக்க முடியாது. ஐ பிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல், ஐபிஎல், கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதாம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதேபோல், வருகிற 26 ஆம் தேதி சென்னை அணி, குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த 2 போட்டிகளை முன்னிட்டு போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே நாளையும், வருகிற 26 ஆம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications