மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகே தடுப்புகளை வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு
சென்னை: மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகே தடுப்புகளை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

மழை நீர் வடிகால்
எனவே மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள Manual Cover திறந்திருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்புகள்
இதன் மூலம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தடுப்புகள், அடையாள அட்டைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கும் தொடர்புடைய துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் மழைநீர் வடிய வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை இன்னும் முழுமை பெறாமல் கிடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஜாபர்கன்பேட்டை காசி திரையரங்கம் அருகே பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

புதிய தலைமுறை செய்தியாளர்
புதிய தலைமுறை ஊடக செய்தியாளர் முத்துகிருஷ்ணன் பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது அந்த பள்ளத்தில் விழுந்தார். இவர் விழுந்த இடத்தில் ஆபத்தான வகையில் நீட்டிக் கொண்டிருந்த கம்பிகள் குத்தியதில் முத்துகிருஷ்ணன் படுகாயங்களுடன் அந்த பகுதியினரால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்குமாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications