1,000 கிலோ யானை தந்தம் திருட்டு? வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் சென்னை நீதிமன்றத்தில் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று உயிரியல் பூங்காவின் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இது கடந்த 1855ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்கா இதுவாகும். மொத்தம் 228.4 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா பரந்து விரிந்துள்ளது.

vandalur zoo elephant


இங்கு பாலூட்டிகள், பறவைகள், பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள் என ஏராளமானவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது.

இந்நிலையில் தான் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.

அப்போது காணொளி காட்சி மூலமாக உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார் ஸ்ரீ வத்சவா ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர், பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 1830 கிலோ யானை தந்தங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கிட்டங்கியில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஒரு கிலோ எடையை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும் பிறகு அது மீட்கப்பட்டதாகவும், ஆயிரம் கிலோ யானைத்தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்போது பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானைத் தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+