தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படுவது மக்களுக்கு வரமா, சாபமா? என்ன நன்மை?
சென்னை: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகரங்களை, மாநகராட்சியாக மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மாநகராட்சியாவது ஒரு நகராட்சிக்கு வரமா அல்லது சாபமா என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் வேகமாக நகரமயமாகும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் என்றால் சந்தேகமே வேண்டாம்... அது தமிழ்நாடு தான்.. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக அரசே கூறியுள்ளது.

பொதுவாக ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், மாநகராட்சிகளை பெருநகர மாநகராட்சியாகவும் அறிவிப்பது காலம் காலமாக உள்ள நடைமுறை. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சிகளாக அறிவிக்கப்படுவது அதிகமாக உள்ளது.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.
இதன்படி, இவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது. இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்" இவ்வாறு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி எப்படி உருவாக்கப்படுகிறது: உண்மையில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவது அந்த ஊருக்கு வரமா அல்லது சாபமா? என்று பார்த்தால், நன்மையும் உண்டு. சில தீமைகளும் உண்டு.. அதற்கு முதலில் மாநகராட்சி எப்படி உருவாக்கப்படுகிறது... ஏன் உருவாக்கப்படுகிறது என்பதை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நகராட்சிகளை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நகராட்சி அளவிற்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்திருக்கும். அதற்கு காரணம் அங்கு நிலத்தின் மதிப்பு குறைவாக இருக்கும். இங்கு அரசின் வரிகள் எல்லாமே குறைவாக இருக்கும். இதன் காரணமாக நகரத்தை ஒட்டிய கிராமங்களில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வரும்...
தியேட்டர்கள், தொழிற்சாலைகள் எல்லாமே நகரத்தை ஒட்டிய கிராமங்களில் வரும். அதேபோல் அடுக்குமாடிகள், வீடுகள், வணிக வளாகங்கள் எல்லாமே அந்த பகுதிகளில் அதிகமாக உருவாகும். அவற்றை நகராட்சியுடன் இணைக்கும் போது, அங்கு வரிகள் உயரும். அந்த வரிகள் எல்லாம் அந்த மாநகரின் வளர்ச்சிக்கு உதவும். இன்னொன்று பெரிய நகரம் இருக்கும் போது அருகில் நகரமாயமான பகுதிகளை நகரத்தில் இணைத்தால் தான் நகரத்திற்கு இணையாக குடிநீர், தரமான சாலை, பாதாள சாக்கடை, பூங்காக்கள் உள்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த முடியும். எனவே தான் அரசு நகரத்தை ஒட்டிய பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கிறது.
மாநகராட்சியாக ஒரு நகராட்சியாக அறிவிக்க என்ன தகுதி: மாநகராட்சியாக ஒரு நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றால், அந்த நகராட்சியின் வரிவருவாய் மிக அதிகமாக இருக்க வேண்டும். அருகில் உள்ள ஊர்களை எல்லாம் சேர்த்தால் குறைந்தது 20 கோடி என்கிற அளவிற்கு ஆண்டு வருவாய் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நகராட்சியை மாநகராட்சியாக அரசு அறிவிக்க முடியும். அதாவது மக்கள் தொகையை தாண்டி, சுற்றியுள்ள ஊராட்சிகளின் ஆண்டு வருவாய், பேரூராட்சிகளின் வருவாய், சிறிய நகராட்சிகளின் ஆண்டு சராசரி வருவாய் ஆகியவற்றை கணக்கிடுவார்கள்.. அப்படி கணக்கிடும் போது 20 கோடி வந்தால் மாநகராட்சியாக அறிவிப்பார்கள். மக்கள் தொகை என்பது சுமார் 3லட்சம் என்கிற அளவில் வர வேண்டியதும் அவசியமாக அரசு பார்க்கிறது. இந்த இரண்டும் இருந்தால் தான் மாநகராட்சியாக ஒரு ஊரை அறிவிக்கிறது.
மாநகராட்சி அறிவிப்பால் என்ன நன்மை: ஒரு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது அதில் இணைந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி உள்பட அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்படும். மாநகரம் முழுவதும் தரமான சாலைகள், சுற்றுச்சாலை அமைக்கப்படும். மாநகராட்சியில் கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்படுவர். புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் போன்றவை பொதுவாக ஏற்படுத்தப்படும். குறிப்பாக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்த முடியும். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவார். சுகாதாரப் பணிகளை மேம்படுத்தி குப்பைகளை அகற்ற போதிய அளவு சுகாதாரப் பணியாளர்களை அரசு நியமிக்கும். பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் நிச்சயம் மாற்றப்படும். அதாவது நகரத்திற்கு இணையான அனைத்து வசதிகளும் அந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும்..
மாநகராட்சி அறிவிப்பால் ஏற்படும் தீமைகள்: மாநகராட்சி அறிவிப்பால் வரிகள் கண்டிப்பாக உயரும். சொத்துவரி, குடிநீர் வரி, சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு வரிகள் உயரும். அதேபோல் மாநகராட்சியில் இணையும் கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் இருக்காது.. அதேநேரம் நகரத்தை ஓட்டிய ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இணைவதால் அங்கு வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications