வெடிக்குது ‘பிரளயம்’.. அக்கு அக்கா பிரிக்க ‘டெல்லி’ போட்ட பிளான்.. வீடியோவுக்கு பின்னணி இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், 'இந்தியா கூட்டணியை அக்கு வேறாகப் பிரிக்க பாஜக பிளான் போட்டுள்ளதாம். அதன் ஒரு பகுதிதான், தயாநிதி மாறனின் பழைய வீடியோ இப்போது பரவி வருவதும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இங்கு வந்து கட்டடம் கட்டுகிறார்கள், கக்கூஸ் கழுவுகிறார்கள் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி, பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Is BJPs big plan to collapse india alliance?

பழைய வீடியோ: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், "ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையை பாருங்கள். இன்று கட்டடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, வீடு கட்டி தருகிறார்கள். சாலையை சுத்தம் செய்கிறார்கள். கழிவறை கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை" என்றார்.

இந்நிலையில், தற்போது திடீரென, தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு வீடியோ இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. பாஜகவினர் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, திமுகவை கடுமையாக சாடி வருகின்றனர். தயாநிதி மாறனின் பேச்சு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெடித்தது சர்ச்சை: பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷ்சத் பூனாவாலா வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் ஒரு பிரித்தாளும் முயற்சி நடந்துள்ளது. முதலில் ராகுல் காந்தி வட இந்திய வாக்காளர்களை அவமதித்தார். பின்னர் ரேவந்த் ரெட்டி பீகார் டிஎன்ஏவை அவமதித்தார். பின்னர் திமுக எம்.பி செந்தில் குமார் கோமூத்ரா மாநிலங்கள் என்று பேசினார். இப்போது தயாநிதிமாறன் இந்தி பேசுபவர்களை அவதூறாக பேசியுள்ளார். இந்துக்களை, சனாதனத்தை அவமதிப்பது, பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்வது இந்தியா கூட்டணியின் டிஎன்ஏவிலேயே உள்ளது." என்று விமர்சித்தார்.

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. இந்தி பேசும் மக்கள் குறித்த தங்கள் கூட்டணிக் கட்சியின் கருத்தை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஏற்றுக் கொள்கிறார்களா? இந்தி பேசும் மக்கள் மீது திமுக மற்றும் இந்தியா கூட்டணி ஏன் இவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று பீகார் மாநில பாஜக எம்.பி கிரிராஜ் சிங் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கூட்டணிக்குள் சலசலப்பு: தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சு குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், திமுக கருணாநிதி தலைவராக இருந்த கட்சி. சமூக நீதியில் நம்பிக்கையுள்ள கட்சி. திமுக தலைவர்கள் யாராவது பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில மக்களைப் பற்றி ஏதாவது பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. பீகார் மக்களாகிய நாங்கள் பிற பகுதிகளில் உள்ள மக்களை மதிக்கிறோம். நாங்களும் அதையே எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய விவகாரத்தை இப்போது கிளப்பிவிட்டிருப்பதன் பின்னணியில், 'இந்தியா' கூட்டணியை சிதைக்கும் பாஜகவின் திட்டம் உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையில், பாஜக இதுபோன்ற அஸ்திரங்களை ஏவி வருவதாகக் கூறுகிறார்கள்.

திமுகவினரின் பேச்சால் கூட்டணியில் சிக்கல்: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமுஎகச மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "டெங்கு, மலேரியா, கொரோனா இவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். சனாதனம் விஷயத்திலும் அப்படித்தான். சனாதனத்தை அழிப்பதுதான் நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு, நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. உ.பி சாமியார், உதயநிதி தலைக்கு விலை வைத்தார். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரும், உதயநிதியின் சனாதன தர்மம் பற்றிய பேச்சை கண்டித்தனர். உதயநிதியின் பேச்சை, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஏற்கின்றனவா என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 5 மாநில தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவுக்கும், உதயநிதியின் சனாதன தர்மம் பற்றிய பேச்சு ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.

மன்னிப்பு கேட்க வைத்தார்: இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், இந்தி பேசும் கோமூத்ரா மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் உங்களால் ஒருபோதும் நுழைய முடியாது என்று பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்தியா' கூட்டணி கட்சிகளே வெகுண்டெழுந்தன. இதையடுத்து, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், உடனடியாக எம்.பி செந்தில் குமாரை கண்டித்து, அவரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.

இப்படியாக, திமுகவில் எழும் குரல்களுக்கு, 'இந்தியா' கூட்டணியை முன்வைத்து பாஜக கேள்வி எழுப்புவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கட்சியின் நான்காவது கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் இந்தியில் பேசிய நிலையில், அவருடைய பேச்சை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திடுமாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி மனோஜ் ஜாவிடம் கேட்டுள்ளார் திமுகவின் டி.ஆர்.பாலு.

இந்தி - திமுக: ஆனால், நிதிஷ் குமார் மொழிபெயர்க்கக்கூடாது என மனோஜ் ஜாவிடம் கடிந்துகொண்டதாகவும், இந்திதான் தேசிய மொழி என்று உறுதியாகக் கூறியதுடன், ஆங்கிலத்தை பிரிட்டிஷ் அரசு திணித்தது என்று நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை, 'இந்தியா' கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது தமிழக பாஜக.

தமிழ் மொழிக்காக பாடுபட்டடாக மார்தட்டிக் கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் இந்தி தேசிய மொழி என்று கூறி மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தபோது அமைதி காத்தது என்? தமிழை விட இந்தி உயர்ந்தது என்றெண்ணி இந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா திமுக என சரமாரியாக கேள்வியை எழுப்பியது தமிழக பாஜக. மேலும், உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDIA கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும், ஆனால் எதுவும் நடக்கவிலையே என்றும் விமர்சித்தது பாஜக.

இதுதான் சமயம்: இப்படியான சூழலில் தான் திமுக எம்.பி தயாநிதி மாறனின் பழைய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. இந்தி விவகாரம் திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இடையே பிணக்கை உருவாக்கும் என பாஜக கணக்கு போடுகிறதாம். நிதிஷ் குமார் பேசியது 'இந்தியா' கூட்டணிக்குள் தற்போது நீறுகொண்ட நெருப்பாக உள்ள நிலையில், பீகாரிகள் பற்றி திமுக எம்.பி பேசியதை இப்போது கிளப்பிவிட்டால், இந்தியா கூட்டணி பீஸ் பீஸாகிவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்காம்.

அதனால், தான் பழைய வீடியோவை இப்போது பற்ற வைத்து, புகையை நெருப்பாக்கி விட்டிருக்கிறது பாஜக, இந்த விஷயம், 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் பெரிய மோதலை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம், அதை திமுகவும், காங்கிரஸும், கூட்டணி கட்சிகளும் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதுதான் சவாலே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+