அண்ணாமலை ஆரம்பிக்கும் பால் பண்ணை.. சரியாக செய்தால் லாபம் கூரையை பிச்சுகிட்டு வந்து கொட்டுமாம்!
சென்னை: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்குவதாகச் சொல்லி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், இதற்காக PMEGP திட்டத்தில் கடனுக்காகவும் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது ஒரு பக்கம் இருக்க நமது நாட்டில் பால் பண்ணை நடத்துவது லாபகரமானதுதானா.. இதில் இருக்கும் சிக்கல்களும் சவால்களும் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கோவை மாவட்டம், காளப்பட்டியில் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள பாஜக மாஜி மாநில தலைவர் அண்ணாமலை, அதில் எந்தவொரு முறைகேடுகளும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அங்குப் பால் பண்ணை அமைக்கப் போவதாகவும் அதற்காக மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கடன் பெற விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் பால் பண்ணை நடத்துவது லாபம் தருமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

லாபகரமான ஒன்றா?
பால் பண்ணை தொழில் லாபகரமான ஒன்றா? எனக் கேட்டால்.. ஆம் லாபகரமானதுதான்.. ஆனால், அதற்குப் பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆடு, மாடுகளைச் சரியாகக் கையாள்வது, தொழில்நுட்பப் பயன்பாடு, தீவனம், தொழிலாளர்கள் எனப் பல விஷயங்களைச் சரியாகச் செய்தால் மட்டுமே மாட்டுப் பண்ணையில் லாபம் பார்க்க முடியும்.
குறிப்பாகப் பால் தவிர வெண்ணெய், நெய், பன்னீர் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்தால் வருவாயை அதிகரிக்க முடியும். அரசு மானியங்கள் மற்றும் திட்டங்களும் லாபத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதனால் சரியாகத் திட்டமிட்டு, முழு நேரம் அதைக் கவனித்தால் பால் பண்ணைகள் லாபகரமான ஒன்றாக இருக்கும்.
இது முக்கியம்
முதலில் என்ன மாதிரியான பாடு அல்லது எருமைகளை நமது பண்ணைக்கு எடுக்கிறோம் என்பது முக்கியம்.. அதிக பால் தரும் பசு அல்லது எருமைகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். ஜெர்சி போன்ற மாடுகள் அதிக பால் தரும் என்றாலும் அதற்குப் பராமரிப்பு அதிகம். எனவே, சரியான மாடுகளைத் தேர்வு செய்வது ரொம்பவே முக்கியம். மேலும், சரியான இனப் பெருக்கம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.
மாட்டுப் பண்ணையில் அதிகம் செலவு வைக்கும் ஒரு விஷயம் என்றால் அது தீவனம் தான்.. அதை நாம் சரியாகக் கையாண்டாலே செலவுகளைச் சமாளித்துவிடலாம்.. மேலும், தீவனங்களைப் பொறுத்தே பால் உற்பத்தியும் இருக்கும் என்பதால் நாம் மிகக் கவனமாகத் தீவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.. மேலும், பால் பண்ணை நடத்துவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பால் பொருட்கள்
அதேபோல பாலை தவிர்த்துவிட்டு, இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான வெண்ணெய், நெய், பன்னீர் அல்லது தயிர் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம். அது கூடுதல் வருவாயை நமக்குப் பெற்றுத் தரும். தமிழகத்தைச் சேர்ந்த மில்கி மிஸ்ட் நிறுவனம் இப்படி தான்.. அந்த நிறுவனம் பாலை விற்பனையே செய்யாது. ஆனால், தமிழகத்தில் முன்னணி டைரி நிறுவனமாக இருக்கிறது. அதற்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் அவர்கள் கவனம் செலுத்துவதே பிரதான காரணமாகும்.
மேலும் இடைத்தரகர்களைத் தவிர்த்துவிட்டு நேரடியாக நுகர்வோருக்கு விற்கும் முறையைப் பின்பற்றலாம். இப்போது பல நிறுவனங்கள் இதுபோல நேரடியாக மக்களுக்கு விற்கும் முறையைப் பின்பற்றுகின்றன. அதில் நல்ல லாபமும் பார்க்க முடிகிறது. பால் பண்ணையில் மற்றொரு மிகப் பெரிய செலவு என்றால் அது ஊழியர்களுக்கான செலவு தான். எனவே, அதைச் சமாளிக்க ஓரளவுக்கு ஆடோமோஷன் பக்கம் போகலாம்.. தானியங்கி பால் கறக்கும் இயந்திரங்கள், மாடுகளை நிர்வகிக்க சாப்ட்வேர் எனச் சரியான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தால் செலவுகளைக் குறையும்.
சவால்கள் என்ன
அதேநேரம் பால் பண்ணையை நடத்துவதில் பல சவால்களும் உள்ளன. குறிப்பாக அதை ஆரம்பிக்க முதலீடு மிக அதிகமாகத் தேவைப்படும். ஒரு சிறிய பால் பண்ணையைத் தொடங்குவதற்குக் கூட, ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.. போதுமான தீவனத்தை பெறுவதும் நம்ம ஊரில் கொஞ்சம் சிக்கலானதுதான்.. எல்லாவற்றையும் விட மாடுகளின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் அது பண்ணை முழுக்க பரவிவிடும்.
இதுபோல சில விஷயங்களை நாம் கவனமாக இருந்தால் பால் பண்ணை நடத்துவது நல்ல லாபகரமான தொழிலாகவே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பாலும் பால் சார்ந்த பொருட்களும் என்பது தினசரி வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எனவே, நாம் கவனமாக நடத்தினால் பால் பண்ணையிலும் லாபம் கொட்டும்!












Click it and Unblock the Notifications