விஜய் மாநாட்டுக்கு முட்டுக்கட்டை போடுகிறதா திமுக? காவல்துறை நெருக்கடி தருகிறதா? நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் திமுக அரசியல் செய்கிறதா? காவல்துறையை மறைமுகமாகப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போடப் பார்க்கிறதா ? உண்மை நிலவரம் என்ன?

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற அனுமதி கோரி காவல்துறையிடம் அக்கட்சியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார். மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள இடமானது தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் அனுமதி வழங்கப்படுமா? என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாநாட்டுப் பணிகளை அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

vijay tvk

இதனிடையே நேற்று விழுப்புரம் காவல்துறை ஆணையர் தரப்பிலிருந்து 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜய் கட்சி நிர்வாகிகளை காவல்துறை கேட்டுள்ளதாக தெரிகிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடக்க உள்ள மைதானம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளது. அதேபோல் ரயில்வே பாதையிலிருந்தும் மிக அருகில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. எனவே காவல்துறை தரப்பிலிருந்து உரிய விளக்கத்தைக் கேட்டுள்ளனர்.

திருச்சியில்தான் முதலில் நடத்துவதாக இருந்தது. அங்கே நடத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அடுத்து ரயில்வே கிரவுண்ட் ஒன்றை தேர்வு செய்தார்கள். ஆனால், அங்கே மாநாடு நடத்த 6 கோடி ரூபாய் வாடகை கோரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தொகையைச் செலவு செய்ய வேண்டுமா என்பதற்காக வேறு இடம் தேடினார்கள். இந்த இடத்திற்கான அனுமதி பெறுவதற்கு அண்ணாமலையிடம் விஜய் கட்சி நிர்வாகிகள் பேசினார்கள். அவரும் இதற்கு உதவினார். இருந்தும் ஏதோ விஜய் மனதிற்கு அந்த இடம் ஒத்துவரவில்லை. அப்போதுதான் திருச்சி சிறுகனூரில் விசிக மாநாடு நடத்திய இடத்தை போய் பார்த்தார் புஸ்ஸி ஆனந்த்.

vijay tvk

இதனைத் தொடர்ந்து ஈரோடு கூட விஜய் லிஸ்டில் இருந்துள்ளது. சேலம், ஈரோடு இரண்டு ஊர்களும் தென் தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களுக்குச் சரியாக இருக்காது என்று இந்த ஊர்களைக் கைவிட்டார்கள். அதன் பிறகே விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தைத் தேர்வு செய்தார்கள். அதற்கான அனுமதி கேட்டும் காவல்துறையும் மனுவும் அளித்தார்கள்.

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருவதற்கும் கன்னியாகுமரியிலிருந்து வருபவர்களுக்கும் அது வசதியானது மட்டுமல்ல; எளிமையானது என்று முடிவு செய்தே இந்த இடத்தை தேர்வு செய்தார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் வழக்கமாகவே சென்னையிலிருந்து போகும் பேருந்துகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வாகன நெரிசல்களில் சிக்கித் தவிக்க வேண்டி உள்ளது. அந்தச் சாலையை ஒட்டி மாநாடு என்பதால் யோசிக்கிறது காவல்துறை. கூடவே விஜய் மாநாடு நல்ல வேளையாகத் திங்கள் கிழமை போன்ற வேலை நாட்களில் ஏற்பாடு செய்ய தவெக திட்டமிட்டுள்ளது. விடுமுறை தினங்களில் மாநாடு நடந்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்துவிடும்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் நடத்தும் மாநாடு இது. விசிக சிறுகனூரில் மாநாடு நடத்திய போது மிகப்பெரிய அளவில் கூட்டம் வந்தது. நாதக மாநாட்டுக்குக் கூட லட்சக்கணக்கான பேர் வரும் காலம் இது. விஜயகாந்த் பல மாநாடுகளை நடத்தி இருக்கிறார். அதற்குச் சேர்ந்த கூட்டத்தை மக்கள் இதற்கு முன்னர் பார்த்துள்ளனர். ஒருமுறை திருச்சியில் ஜெயலலிதா கூட்டணி கூட்டம் போட்டதற்கே ஒட்டுமொத்தமாகத் திருச்சியே முடங்கியது. 2016இல் சட்டசபைத் தேர்தலை ஒட்டி நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 பேர் பலியானார்கள்.

ஆகவேதான், காவல்துறையினர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் பலவேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளனர். மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மைதானத்தில் மட்டும் 10 விவசாய கிணறுகள் உள்ளனர். பக்கத்திலேயே வீடூர் அணை உள்ளது. இவற்றை மனதில் வைத்துத்தான் 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கூறியுள்ளது.

மாநாட்டில் என்ன உணவு வழங்கப்படும்? எவ்வளவு பேர் வருவார்கள்? வாகனங்களை நிறுத்த முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் யார்? அவர்களின் பாதுகாப்பு வசதிகள் எப்படி செய்யப்பட உள்ளன? நில உரிமையாளர்கள் யார்? அவர்களிடம் பெற்ற அனுமதி ஆவணங்கள் என்ன? மேடையின் நீளம் என்ன? கழிவறை வசதிகள் செய்யப்படுமா? இவை போன்ற வழக்கமான கேள்விகளைத்தான் காவல்துறை கேட்டுள்ளது.

உடனே அதில் ஏதோ ஆளும் கட்சி தலையீடு என சிலர் பேசுவது அறியாமை. ஏனெனில் இந்த நடைமுறைகள் அனைத்து வழக்கமானவைதான். புதிய நடைமுறைகளோ விதிமுறைகளோ அல்ல.

மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக மாநாட்டுக்கும் இதே கேள்விகள் கேட்கப்பட்டன. ஐஜேகே நடத்திய மாநாட்டுக்குக் கூட இதே விவரங்களை காவல்துறை கேட்டிருந்தது.இதை ஏன் கேட்கப்படுகிறது என்றால், மாநாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது, அவர்கள் அளித்த உறுதிமொழியைக் கடைப்பிடித்தார்களா? கொடுத்த விதிமுறைகளைச் சரியாகச் செயல்படுத்தினார்களா? என ஒப்பிட்டுப் பார்க்க ஆவணங்கள் காவல்துறை தரப்புக்குத் தேவை.

சமீபத்தில் உபியில் போலே பாபா கூட்டிய கூட்டத்தில் பலர் உயிரைப் பறிகொடுத்தனர். சாதாரண சாமியாருக்கு இவ்வளவு கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது என்றால், தமிழ்நாட்டில் லைம் லைட்டில் உள்ள நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் வருவார்கள்? அதுவும் முதல் மாநாடு. எனவே சொல்லவே வேண்டாம். காவல்துறை கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும்.

ஆளும் கட்சியான திமுக இந்த மாநாட்டுக்கு ஏதேனும் இடையூறு செய்வதாக இருந்து அதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் பெற வழி விடாது. அப்படிப் பார்த்தால் விஜய் படம் இப்போது வெளிவர உள்ளது. அதற்கு 1100 திரையரங்குகள் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்கங்கள் உதயநிதி கட்டுப்பாட்டில் தான் உள்ளன என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி இருந்தும் இவ்வளவு இடங்களில் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் படம் வெளியாகப் போகிறது. எனவே திமுக இந்த மாநாட்டை அரசியல் ரீதியாகவே அணுகும் என்று சில உடன்பிறப்புகள் சொல்கிறார்கள்.

மேலும் விஜய் மாநாடு தொடர்பாக ஒருவேளை தேசிய நெடுஞ்சாலை வாகன நெரிசலில் சிக்கினால், சில மாதங்கள் முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரச்சினை போலப் பயணிகள் நடு ராத்திரியில் சாலையில் போராட்டத்தில் இறங்கினால்? இதை எல்லாம் கவனத்தில் கொண்டே அரசு முடிவு எடுக்கும். ஏனென்றால் எல்லா நல்ல விசயத்திற்கும் பலர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். அசம்பாவிதம் என்றால் ஆளும் கட்சி தலையைத்தான் உருட்டுவார்கள் என்கிறார் ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+