டார்கெட் செய்யப்படும் பிடிஆர்..? பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்ட். முக்கியமாக ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளாமல் போன பின் வரிசையாக இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன. அதிமுக பாஜக என்று எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிடிஆரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
இன்னொரு பக்கம் பிடிஆரும் எதற்கும் சளைக்காமல்.. நீங்கள் பேசுவதற்கு எல்லாம் நானும் பதிலடி கொடுப்பேன் என்று ட்வீட்டரில் விளாசிக்கொண்டு இருக்கிறார். இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து இணையத்தில் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பினார்கள். அந்த வதந்திகளுக்கு பதில் அளிக்க தொடங்கியதில் இருந்துதான் பிடிஆர் ட்வீட்டரில் மீண்டும் டிரெண்டாகி வருகிறார்.
கொழுந்தியாள் வீட்டு வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் இவருக்கு எதிராக வதந்திகள் பரபரப்பட்ட நிலையில் அனைத்திற்கும் எதிராக பிடிஆர் பதில் அளித்தார். சில இடங்களில் கொஞ்சம் கோபம் தூக்கலாக வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சிகள்
சாதாரண ட்வீட்டர் ஐடிகள் மட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் இப்படி தொடர்ந்து பிடிஆருக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மூலமும், ஆளும் தரப்பிற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் மூலமும் பிடிஆர் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார். இவர் செய்வதை எல்லாம் எதிர்க்கட்சிகள் தீவிரமாக வாட்ச் செய்வது வருவதாகவே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிடிஆர் இப்படி திடீரென சமூக வலைத்தளங்களில் டார்கெட் செய்யப்பட 5 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

1 கோபம் அடைகிறார்
முதல் காரணம், பிடிஆர் மற்ற அரசியல் தலைவர்கள் போல இல்லை. இவர் சட்டென கோபம் அடைகிறார். அதை பொது வெளியில் காட்டிவிடுகிறார். அது தனது சொந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. தன் பக்கம் நியாயம் என்று தெரிந்தால் துணிச்சலாக ட்வீட்டரில் பேசி விடுகிறார். இதை கொஞ்சம் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கின்றன. கொஞ்சம் லேசாக இவருக்கு எதிராக விமர்சனம் வைத்தால் போதும் பிடிஆர் தானாக கோபப்பட்டு நிறைய ட்வீட்களை செய்து அதை பெரிதாக்கி விடுகிறார்.

2 மத்திய அரசை விமர்சிக்கிறார்
இரண்டாவதாக மத்திய அரசை தரவுகளோடு இவர் விமர்சனம் செய்கிறார். நிதித்துறையை கையில் வைத்துள்ளார். ஜிஎஸ்டி தொடங்கி அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களோடு பேசுகிறார். இதனால் இவரை தொடர்ந்து டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய தரப்பை இவர் சீண்டும் நிலையில் பிடிஆரை இதை மையமாக வைத்து இங்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய அரசை இவர் விமர்சிக்க கூடாது.. பிடிஆரின் இமேஜை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் இப்படி எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைப்பதாக திமுக தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

3 தேசிய அளவில் வைரல்
அதோடு பிடிஆர் தேசிய அளவில் பிரபலமாக இருப்பதால் அவருக்கு எதிராக இங்கே அதிகம் விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று திமுகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர் தேசிய அளவில் பிரபலமாக இருக்கிறார். திமுகவின் தேசிய முகம் போல ஊடகங்களில் பேசுகிறார். இதை விரும்பாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையாக நெகட்டிவ் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். பிடிஆருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாக்காவாக களமிறங்கி உள்ளன என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 மதித்து பதில் சொல்கிறார்
அதோடு பிடிஆர் எல்லா ஐடிகளுக்கும் மதித்து பதில் அளிக்கிறார். பேக் ஐடியாக இருந்தாலும்.. உண்மையான ஐடியில் வந்து ட்வீட் செய் என்று சொல்லும் அளவிற்கு பிடிஆர் எல்லோரின் விமர்சனங்களுக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார். இதை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அவரை சண்டைக்கு இழுத்து.. வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்கி.. எப்படியாவது முடிந்த அளவு சர்ச்சைகளை உண்டாக்கும் வேலைகளும் நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

5 பட்டென பேசுகிறார்
இதெல்லாம் போக மற்ற திமுக அமைச்சர்கள் நீண்ட காலம் அரசியலில் இருந்தவர்கள். அன்பில் மகேஷ், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் போன்ற அமைச்சர்கள் எல்லாம் தங்களுக்கு எதிராக விமர்சனம் வைக்கப்பட்டால் அதிகபட்சம் ஒன்றிரண்டு முறை அதற்கு பதில் சொல்லிவிட்டு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேக்சின் விஷயத்தில் கோவை புறக்கணிக்கப்படுவதாக வந்த விமர்சனங்களை நேர்த்தியாக கையாண்டார். ஆனால் பிடிஆர் கொஞ்சம் பட்டென பேசுவதும், சமயங்களில் அவருக்கு எதிராக திரும்பி விடுகிறது.

திமுக தரப்பு அதிருப்தி?
இவரின் சமீபத்திய பேச்சுக்கள் காரணமாக திமுக தரப்பு அதிருப்தியில் இருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன. பேட்டி ஒன்றில் கூட திமுக மூத்த உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் பிடிஆரின் சமீபத்திய ட்வீட்கள் குறித்து விமர்சனம் செய்தார். அதில், பிடிஆர் எளிதில் கோபப்பட கூடிய நபர்.அவர் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நானும் அவரிடம் அதைத்தான் சொல்லி இருக்கிறேன். ஒரு அரசியல் தலைவர் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். முதல்வர் பிடிஆரிடம் பேசி இருப்பார் என்றே நான் நினைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதாவது பிடிஆரின் பேச்சை தலைமை சரியாக எடுத்துக்கொள்வது இல்லை என்பது போல டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் வைத்து இருந்தார்.

பிடிஆர் இப்படி செய்ய வேண்டும்
ஆனால் அதே சமயம் திமுக தரப்பில் பிடிஆரின் பேச்சை சிலர் ரசிப்பதாகவும் கூறப்படுகிறது. தலைமை நிர்வாகிகள் சிலர்.. பிடிஆர் பேசுவதில் தவறு இல்லை. கட்சியில் மற்றவர்கள் மாதிரியே அவரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் அடித்து ஆடுவதுதான் சரி. தேசிய அளவில் தற்போது இருக்கும் ஊடக டிரெண்டிற்கு இப்படி ஒருவர் பேசினால்தான் சரியாக இருக்கும். ட்வீட்டரில் திமுக வலுவாக இல்லை. பிடிஆர் போன்றவர்கள் இப்படி கொஞ்சம் வலுவாக பேசுவது நல்லதுதான்.. அப்போதுதான் சமாளிக்க முடியும் என்றும் திமுகவில் சிலர் கருதுகிறார்களாம்.

கருணாநிதி ஸ்டைல்
முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது சில அமைச்சர்கள் மட்டும் கொஞ்சம் அதிரடியாக பேசுவார்கள். விமர்சனங்களுக்கு கருணாநிதி நாசுக்காக பதில் சொல்வார். சில அமைச்சர்கள் அதிரடியாக பொறி பறக்க பேசுவார்கள். அப்படிதான் ஸ்டாலின் இப்போது நாசுக்காக பேசுகிறார். பிடிஆர் அதிரடியாக பேசும் பொறுப்பை எடுத்துக்கொண்டு உள்ளார். மேலிடத்தின் கிரீன் சிக்னல் கிடைத்துதான் அவர் இப்படி எல்லாம் வலிமையாக பதில் தருகிறார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications