2 மேட்டர்கள்.. திமுக "புள்ளி" அப்படி சொன்னதும்.. பாய்ந்து வந்த காங். தலை.. கோபத்தில் "கதர்கள்"?
சென்னை: தமிழ்நாட்டில் நடந்த 2 சம்பவங்களால் திமுக மீது காங்கிரசை சேர்ந்த சில புள்ளிகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை விடுதலை செய்து கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விடுதலையை செய்துள்ளது.

என்ன நடந்தது?
இந்த விவகாரத்தை தற்போது திமுக தரப்பில் சிலர் இணையத்தில் கொண்டாடி வருகிறது. 7 பேரையும் விடுதலை செய்வோம் என்பது திமுக கொடுத்த வாக்குறுதிதான். திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 494ல், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும், என்று குறிப்பிட்டு இருந்தது.

நிறைவேற்றி உள்ளது
இதைத்தான் திமுக தற்போது நிறைவேற்றி உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு சார்பாக கடுமையாக வாதம் வைக்கப்பட்டது. அதில்தான் திமுக வெற்றியும் பெற்று உள்ளது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதானவர்களை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியினர் இந்த விடுதலைக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதுதான் திமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையே சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த எம்பி ரான்தீப் சிங் சுரஜ்வாலா இதை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இன்னும் பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த விடுதலையை விமர்சனம் செய்து போஸ்ட் செய்துள்ளனர். ஆனால் திமுகவினர் இதை வரவேற்று உள்ளனர்.

ராஜீவ் காந்தி
முக்கியமாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், 2000ஆம் ஆண்டு நளினி அவர்களின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைத்த கலைஞர் அவர்களின் நடவடிக்கை தான் எழுவர் விடுதலைக்கு சட்டரீதியான முதல் தொடக்கம்! ஆளுநர் அதனை ஏற்கக்கூடாது என சொல்லி ஆளுநர் பாத்திமாபீவியிடம் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியவர் ஜெயலலிதா அவர்கள்!, என்று போஸ்ட் செய்துள்ளார்.

விமர்சனம்
காங்கிரஸ் ஐடி பிரிவு செயலாளர் லட்சுமி காந்தன் இடத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில், தவறான தகவல். அன்னை சோனியா காந்தி அவர்களின் கருனை மனு தான் நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைய காரணம். தவறை திருத்தி கொள்ளுங்கள்., என்று விமர்சனம் வைத்துள்ளார். திமுகவினரின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பலர் இதில் விமர்சனங்களை வைத்து உள்ளனர்.

இடஒதுக்கீடு
இது போக இடஒதுக்கீடும் விவகாரத்திலும் தேசிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் - திமுகவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் உயர் சாதியினருக்கான் 10 சதவிகித இடஒதுக்கீடு நல்லது. அதை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அளவில் மட்டும் சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உள்ளனர். ஆனால் இது சமூக நீதிக்கே எதிரானது. சமூக நீதி போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு என்று திமுக விமர்சனம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications