"கலர்" மாறும் எடப்பாடி?.. மேட்டரே வேறயாம்.. மேலிடத்தில் நடப்பது என்ன.. "ரிவர்ஸ் கியர்" போடும் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜகவுக்கு ஆதரவாக முடிவெடுக்க காரணம் என்ன
சென்னை: அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்ற கூற்று மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகிறது.. நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்ற கூற்றும் உண்மையாகி வருகிறது..!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. பாஜக மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையானவரும்கூட என்பதும் தெரிந்த விஷயம்தான்.
பாஜக மேலிடத்தை ஓபிஎஸ் பகைத்து கொள்ளாத அதேசமயம், தான் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மேலிடத்துக்கு சில விஷயங்களில் வளைந்து கொடுக்காமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் தெரிந்த விஷயம்தான்.

ஓபிஎஸ்
ஆனால், சமீபகாலமாக நடப்பதையெல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லை.. ஓபிஎஸ்ஸிடம் மாறுதல் காணப்படுகிறதோ இல்லையோ எடப்பாடியிடம் நிறையவே மாற்றம் காண முடிகிறது.. குறிப்பாக பாஜகவுடனான உறவில் நெருங்கியே இருக்கிறாரோ என்ற பிம்பத்தையும் ஏற்படுத்த துவங்கி உள்ளார்.. அதற்கு 2 உதாரணங்களையும் இங்கே சொல்லலாம்.. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பாஜகவின் முழக்கத்தை எடப்பாடியும் கையில் எடுத்துள்ளார்.

பாஜகவின் முழக்கம்
‘ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பது பாஜகவின் முழக்கமாகும்.. இதற்கு ஒருசிலரே ஆதரித்தாலும், பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.. "மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று சொல்ல ஆரம்பித்ததே வாஜ்பாய் ஆட்சியில் துணைபிரதமராக இருந்த அத்வானிதான்.. அதைதான் இப்போது பாஜக தன்னுடைய குறிக்கோளில் ஒன்றாக அறிவித்துள்ளது.. இதை இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமானால், மாநிலங்களின் உரிமைகளை பறித்து விட்டு, மத்தியில் ஒரே ஆட்சி என்று கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.. அதன் தொடர்ச்சியாகத்தான், 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் "ஒரே தேசம், ஒரே தேர்தல்" இடம்பெற்றது.

எடப்பாடி பழனிசாமி
இதைதான் தன்னுடைய சமீப கால கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டி கொண்டிருக்கிறார்..
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் திமுக ஆட்சியில் நீடிக்காது.. இந்த ஆட்சி இன்னும் கொஞ்சம் காலத்துக்குதான் என்று செல்லுமிடமெல்லாம் காட்டமாக கூறி வந்து கொண்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவுக்கு ஆதரவான எடப்பாடி பழனிசாமியின் போக்கில் மேலும் மாற்றம் தென்பட துவங்கி உள்ளது.

பாஜக கூட்டணி
இந்த முறை தேர்தலில், நயினார் நாகேந்திரனின் பேச்சு உட்பட ஒருசில காரணங்களால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல், பாஜக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. எனினும் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது "உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகள் போட்டியிட்டு, அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.. அதனால்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது" என்றார்..

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி இப்படி சொன்னதுமே அவரது ஆதரவாளர்களான கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடிக்கு போனை போட்டு கேட்டுள்ளனர்.. "ஏங்க இப்படி சொல்லிட்டீங்க? நமக்கு இதைவிட்டா வேற சான்ஸ் இல்லை, இப்படியே வரப்போகிற தேர்தலிலும் பாஜகவை விட்டு தனித்து போட்டியிடுவதுதான் சரி என்று கூறியுள்ளனர். அதற்கு எடப்பாடி, "இது உள்ளாட்சி தேர்தல்தானே.. எப்படியும் குறைவான வாக்குகளைதான் வாங்குவார்கள்... அவர்கள் பெறும் அந்த வாக்குகளை அடிப்படையாக வைத்து, வரப்போகும் எம்பி தேர்தலில் சீட் தந்துவிடலாம்.. 2 வருடம் இன்னும் பாஜக ஆட்சிதான்.. அவர்களை பகைத்து கொள்ள முடியாது என்றாராம்..

எடப்பாடி திடீர் முடிவு
அதேபோல, நீட் விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தையும் அதிமுக புறக்கணித்ததற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதான் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.. இது தொடர்பாக ஓபிஎஸ் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார்.. "கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அதிமுகவுக்குத்தான் கெட்டப் பெயர் வரும். நீட் விசயத்தில் திமுக நம்பிக்கை மோசடி செய்து விட்டது என மாணவ சமூகம் திமுக மீது கோபமாகவும் அதிருப்தியாகவும் இருக்கும் சூழலில் கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும். கூட்டத்தில் கலந்து கொண்டு நீட் விசயத்தில் திமுக செய்யும் அரசியலை பதிவு செய்வோம். தவிர, பாஜகவின் முடிவுக்கேற்ப நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்?' என்றாராம்.
Recommended Video

எடப்பாடியின் மாற்றம்
ஆனால், என்ன சொல்லியும் எடப்பாடி ஏற்கவில்லையாம்.. கூட்டத்தை புறக்கணிப்போம் என அழுத்தமாக வலியுறுத்தியதால் கடைசியில் ஒப்புக்கொண்டுவிட்டாராம் ஓபிஎஸ்.. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு சாதகமாக மாறி கொண்டிருப்பது ஏன் என்ற ஒற்றைகேள்விதான் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.. அன்று பாஜகவை கோபப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் செய்து கொண்டிருந்ததை எல்லாம், இன்று அப்படியே தலைகீழாக எடப்பாடி செய்து கொண்டிருப்பதன் அர்த்தம்தான் புரியவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications