எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி
சென்னை: எடப்பாடி பழனிசாமி வசமே அதிமுகவின் அதிகார மையங்கள் மீண்டும் குவிந்து வருவதால், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்புக்கு ஆதரவாக இருந்த முக்கிய எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து எடப்பாடியின் இல்லத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.. அமைச்சர் கனவு கலைந்து போன அதிருப்தியில், வேலுமணி முகாமில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி பக்கம் எம்.எல்.ஏ.க்கள் சாயத் தொடங்கியுள்ளதால் அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் கடும் பரபரப்பை சந்தித்துள்ளது.. என்ன நடந்தது?
தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, தற்போது அதன் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறமும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான அணி மறுபுறமும் என கட்சி இரண்டாகப் பிரிந்து நின்று மோதி வந்த நிலையில், இப்போது நிலைமையே தலைகீழாக மாறி வருகிறது.

ஆம், மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பரபரப்பு
அதிமுகவின் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, வேலுமணி மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கட்சிப் பொறுப்புகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்திகள் உச்சகட்டத்தை எட்டின.
முக்கியமாக, தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த சிவி சண்முகம் தரப்புக்கு, கூட்டணி கட்சிகளின் கடும் நிபந்தனைகளால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த ஏமாற்றம், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அமைச்சரவையில் இடம் கிடைத்தால் தங்களுக்கு அதிகாரமும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, தற்போதைய சூழல் பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதன் விளைவாக, இதுவரை எஸ்பி வேலுமணி ஆதரவு முகாமில் இருந்தவர்கள், தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
எடப்பாடி வீட்டில் நுழைந்த அரசியல்வாதி
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் பலரும் வரிசையாக வந்து அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இது சிவி சண்முகம் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அடுத்ததாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிபாஸ்கரும் எடப்பாடி தரப்பில் இணைந்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது ஒரே நாளில் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் வந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
25 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட வலுவான அணியாகச் செயல்பட்டு வந்த வேலுமணி தரப்பு, தற்போது தனது பலத்தை இழந்து தத்தளித்து வருகிறது. தொடக்கத்தில் வேலுமணி அணியில் இருந்த 25 பேரின் கட்சிப் பொறுப்புகள் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகள் நீக்கப்பட்ட போதே, அவர்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களாக மட்டுமே சுருங்கிப் போயினர். இப்போது அந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் மெல்லக் குறைந்து, தற்போது 22 ஆகச் சரிந்துள்ளது.
அப்படியானால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இது அதிமுகவின் உட்கட்சி அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டை அடைந்து வருவதையே உணர்த்துகிறது.
22 முதல் 25 ஆக எகிறிய பலம்
எம்.எல்.ஏ.க்களின் இந்தத் தொடர் வெளியேற்றம், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தியுள்ளது. மேலும், இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் வாசலில் காத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களின் அமைச்சர் கனவு கலைந்து போனதால், இனி எஸ்பி வேலுமணி தரப்பில் இருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தே எம்.எல்.ஏ.க்கள் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் தொடங்கிய இந்த அதிரடி மாற்றங்கள், வரவிருக்கும் காலங்களில் கட்சியின் ஒட்டுமொத்த அதிகார அமைப்பிலும் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
வேலுமணி அடுத்து என்ன செய்வார்
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் கரம் ஓங்கி வருவதால் தனித்து விடப்பட்டுள்ள எஸ்பி வேலுமணி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைக்க கடும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்றே தெரிகிறது.
அதிகார மையமாக எடப்பாடி மாறியுள்ள சூழலில், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தன்னை நிரூபிக்கவோ அல்லது மாற்று அணியைத் திரட்டி எடப்பாடியின் தலைமைக்கு எதிராகப் சட்டப்போராட்டத்தை வலுப்படுத்தவோ அவர் முயற்சிப்பார் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை..
இருந்தாலும் அமைச்சர் பதவி மற்றும் அரசியல் எதிர்காலம் கருதி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியை நோக்கி நகர்வது வேலுமணியின் பலத்தை மென்மேலும் சிதைக்கும் என்பதால், அவர் தனது இருப்பைத் தக்கவைக்க தீவிர அதிரடி வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications