தங்க நாணயம் வாங்குவது நல்லதா அல்லது தபால் துறையின் தங்க பத்திரம் வாங்குது சிறந்ததா? நிபுணர் விளக்கம்
சென்னை: தங்க நாணயம் வாங்குவது நல்லதா அல்லது தபால்துறையின் தங்க பத்திரம் வாங்குவது சிறந்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6271 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ள முடியும். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும். 2024ம் நிதியாண்டுக்கான கடைசி தங்கப்பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தபால்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மத்திய அரசு தங்கப்பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது.
தங்கப் பத்திர விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263 ஆகும். அனைத்து மாவட்ட தலைமை நபால் நிலையங்களிலும் மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் இந்த ஐந்து நாட்களும் தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். இந்த நிதியாண்டின் கடைசி தங்கப் பத்திர விற்பனை இதுவே ஆகும்.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். முதலீட்டாளர்கள் 2016-ம் வருடம் இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்த தொகைக்கான (ஒரு கிராம்-ரூ.2600) முதிர்வு தொகையை தற்போது (ஒரு கிராம்- ரூ.6271) பெற்றுள்ளனர். அதாவது 161 சதவீதம் லாபம் ஈட்டி உள்ளனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்." என தபால்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே தங்கப்பத்திரம் சிறந்த முதலீடாக இருக்குமா அல்லது தங்க நாணயங்களில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கிறது. இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். நெட்டிசன் இதுபற்றி கூறுகையில், தங்க நாணயம் வாங்குறது முதலீட்டுக்காக...அது பல வருஷம்(10-15 வருசம் அல்லது அதற்கு மேல் )வைக்கலாம்.. ஆனா இந்த தங்க பத்திரங்களை 8 வருஷத்துல விற்க வேண்டுமாமே?, இது உண்மையில் நாம் வாங்கி முதலீடு செய்யும் அளவிற்கு உகந்ததா அல்லது தங்க நாணயம் முதலீட்டுக்கு உகந்ததா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், - தங்க நாணயத்தை பொறுத்தவரை செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்ந்து 20% விலை கூடுதலா வரும். ஆனால் தங்கப்பத்திரம் வெறும் தங்கத்தோட விலை மட்டும்தான். 8 வருஷம் கழிச்சி வித்தாலும், உடனே அதே அளவுக்கு மறுபடியும் தங்கப் பத்திரம் வாங்கிக்கலாம். எப்படி பார்த்தாலும், தங்க நாணயத்தைவிட விட தங்கப்பத்திரம் எப்போதுமே சிறந்தது.












Click it and Unblock the Notifications