"இருங்க.. நான் வீட்டுக்கே வரேன்".. "தலை"க்கு போனை போட்ட சசிகலா.. கிறுகிறுவென தலைசுத்தி போன அதிமுக
சசிகலா இல்லாத அதிமுக சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது
சென்னை: தினம் தினம் வெளிவரும் ஆடியோக்கள் சசிகலாவின் அரசியல் வருகையை வலுவாக உணர்த்திவருகிறது.. இதனால், சசிகலாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிமுக மேலிடம் குழம்பி போயுள்ளதாம்..!
"கருவாடு மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுகவில் சேரமுடியாது' என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருந்தார்.. மாஜியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இது தொடர்பாக பல அலசல்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில், ஆனந்தனிடம் போனில் பேசிய ஆடியோ சசிகலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.. ஆனந்தன் 1991-96 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கால்நடை, பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்..

ஆனந்தன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.. இவரை உளுந்தூர்பேட்டை ஆனந்தன் என்பார்கள். சிவி சண்முகத்தின் மிக நெருக்கமான ஆதரவாளரும்கூட.. அதாவது, சண்முகத்தின் ஆதரவாளர்கள்கூட தன்பக்கம் இருக்கிறார்கள் என்பதை அவருக்கு உணர்த்தவே, சசிகலா தரப்பு இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குரல்
ஆனந்தனிடம் சசிகலா பேசியபோது, 'ஆனந்தன் எப்படி இருக்கீங்க? என்று கேட்டார்.. சசிகலாவின் குரலை கேட்டதுமே மாஜி பூரித்து போய்விட்டார்.. உடனே "நேத்தைக்கு வந்தவங்க எல்லாம் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கே இடம் இல்லைன்னு சொல்லிட்டாங்களே.. கட்சி இப்படி கண்ணெதிரே மனசு கஷ்டமா இருக்கு" என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

கவனமான வார்த்தைகள்
அதற்கு சசிகலா, 'நீங்க பழைய ஆளு ஆனந்தன்.. நீங்க ரொம்ப முக்கியம்.. நான் சீக்கிரம் வந்துடுவேன்.. எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.. கொரோனா சரியாகட்டும், நான் வீட்டுக்கே வந்து உங்களை சந்திக்கிறேன்" என்றார். கிட்டத்தட்ட 4 நிமிஷங்கள் 51 வினாடிகள் இந்த உரையாடல் நடந்துள்ளது.. இருவருமே யாரை பெயரையும் குறிப்பிட்டு பேவில்லை.. அம்மா, தலைவர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி மட்டுமே பேசியுள்ளனர். இது திட்டமிட்டு, கவனத்துடன் நடந்ததா? யதேச்சையாக நடந்ததா என்றும் தெரியவில்லை..

லாக்டவுன்
இப்படி வெளிவந்து கொண்டிருக்கும் ஆடியோக்கள் மூலம் 2 விஷயங்கள் தெளிவாய் உணர முடிகிறது.. ஒன்று, சசிகலாவின் வருகை அடுத்த சில நாட்களிலேயே நடக்க போகிறது.. மற்றொன்று, லாக்டவுன் முடிந்ததுமே முக்கிய நிர்வாகிகளை வீட்டிற்கே சென்று சந்தித்து பேசும் திட்டத்திலும் சசிகலா இருக்கிறார்.. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கலக்கத்தை தந்து வருகிறது.

ஜெயக்குமார்
ஆனால், 'நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தரும்போது, 'சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலை தொடரும்... அதிமுக பொதுச்செயலாளரை புதிதாக தேர்வு செய்ய மாட்டோம்... ஓபிஎஸ், இபிஎஸ்தான் கட்சியை வழிநடத்துவர்'' என்று உறுதிபட தெரிவித்துள்ளார்..

சாத்தியமா?
அப்படியானால் சசிகலா இல்லாமலேயே அதிமுக செயல்பட முடியுமா? அதற்கு ஓபிஎஸ் முழு ஒத்துழைப்பு தருவாரா? நேற்றுகூட இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே அதிருப்தி வெடித்தாக தகவல்கள் வந்ததற்கு என்ன காரணம்? 8 எம்எல்ஏக்களை போனில் பேசி பேசியே, தன் பக்கம் சசிகலா விழ வைத்துவிட்டதாக கூறப்படும் தகவல் எதை காட்டுகிறது? என்ற பல கேள்விகள் நம்மிடம் தொத்தி நிற்கிறது.












Click it and Unblock the Notifications