விட்டு விளாசுறாரே! டிடிவியை பார்த்ததும்.. ஓபிஎஸ் அடுத்த அதிரடி! அவரையும் போய் பார்க்க போறாராமே? அடடா
சென்னை: நேற்று டிடிவி தினகரனை அவரின் இல்லத்தில் சந்தித்த ஓ பன்னீர்செல்வம் விரைவில் இன்னும் சில முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொட்டதெல்லாம் தோல்வி என்று கடும் மன வருத்தத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் முகம் நேற்றுதான் கொஞ்சம் தெளிவானது. அதற்கு காரணம் டிடிவி தினகரன் உடன் நடந்த சந்திப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது.
தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதையடுத்தே சமீபத்தில் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாடு தோல்வியில் முடிந்து உள்ளது.
இந்த மாநாட்டிற்கு டிடிவி தினகரன், சசிகலா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே வரவில்லை. இரண்டு பேருக்குமே அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாற்றம்?: இந்த நிலையில்தான் நேற்று ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் இடையே சந்திப்பு நடந்தது. நேற்று டிடிவி தினகரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார்.
இதில் வீட்டு வாசலுக்கே போய் ஓபிஎஸ் ஆகியோரை டிடிவி தினகரன் வரவேற்றார். இந்த சந்திப்பில் சேர்ந்து செயல்படுவது, அதிமுகவை மீட்பது, எடப்பாடி பழனிசாமியை அதிகாரத்தில் இருந்து நீக்குவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
இந்த சந்திப்பிற்கு பின் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில். நான் ஓ பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில்கூட நான் அவர் கையைப் பிடித்துக் கொண்டு செல்வேன். அந்த அளவிற்கு எனக்கு நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. எந்த சுயநலமும் இல்லை.
அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். கட்சியை பல நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் அரக்கர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

அதிமுகவை மீட்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. எடப்பாடியை நம்ப முடியாது. அவர் சுயநலம் மிக்கவர் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
சசிகலா சந்திப்பு: இந்த நிலையில்தான் விரைவில் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய பக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சசிகலா அளித்த பேட்டியில், ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும், என்றார்.
இதையடுத்து.. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு கோபமாக பதில் அளித்த சசிகலா.. என்னங்க இது.. என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். உங்க கிட்ட சொல்லிவிட்டு வேண்டுமானால் நான் முடிவு எடுக்கிறேன், என்று சசிகலா கூறினார்.
இதை பற்றி ஓபிஎஸ் அளித்த பேட்டியிலும் கூட, கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன். ஏன் அவசரப்படுகிறீர்கள். கண்டிப்பாக போய் பார்ப்பேன். எப்போது பார்ப்பேன் என்று சொல்லுவேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போய் பார்ப்பேன். உறுதியாக பார்ப்பேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் அதற்கான நேரம் வந்துவிட்டதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரன் உடன் சந்திப்பு முடிந்த நிலையில் அடுத்து சசிகலாவை அவர் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

சசிகலா இப்போது வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்ததும் இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் மூவரும் ஒரே நாளில் ஒன்றாக விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. சென்னையில் முக்கியமான இடம் ஒன்றில் இவர்கள் சந்திப்பு விரைவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications