சீச்சீ.. அதிமுக பழம் புளிக்கும்.. அப்படியே முடங்கிய ஓபிஎஸ்.. உருவாகும் தனிக்கட்சி.. அப்போ பாஜக?
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவும், ஓபிஎஸ் தரப்புக்கு பாதகமாகவும் கொடுக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவு, ஓபிஎஸ்சை மையப்படுத்தி புதிய பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீச்சீ... அதிமுக என்கிற பழம் புளிக்கும் என நினைத்து இனியும் எடப்பாடியோடு மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு தனிக்கட்சி துவக்கும் வழியை ஆராயுங்கள். அதுதான் உங்களை நம்பியுள்ள தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ள உதவும் என ஓபிஎஸ்சிடம் திமுக தரப்பில் அட்வைஸ் தரப்பட்டு வருகிறதாம்.

அதாவது, எடப்பாடிக்கும் ஓபிஎஸ்சுக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் அதிமுக தொண்டர்கள் பிரிந்து கிடந்தால், அது திமுகவுக்கு சாதகமான விசயம். ஆனால், நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடிக்கு சாதகமாக மட்டுமே நடந்து கொண்டிருப்பதால், இனியும் எடப்பாடியோடு ஓபிஎஸ் மல்லுக்கட்டினால் ஓபிஎஸ்சை விட்டுவிட்டு அவரது தொண்டர்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் நகர்ந்து விடுவார்கள். அப்படி நகர்வது எடப்பாடிக்குத்தான் வலிமைக் கூடும்.
கதறும் ஓ பன்னீர்செல்வம்: அதனால் ஓபிஎஸ் தனிக்கட்சி துவக்கினால், அவரை நம்பி வந்த அதிமுகவினர் இங்கேயே இருக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற யோசனையில்தான் தனி கட்சி மூடை ஓபிஎஸ்சுக்கு திமுக கிளப்பி விட்டுள்ளது என்றும் ஒரு தகவல் கிடைக்கிறது. ஓபிஎஸ்சும் தனிக்கட்சி மூடுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், உச்சநீதிமன்றத்தில் நம்முடைய மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் அதில் சாதகமான அம்சம் கிடைக்க ஏதேனும் சட்ட பாயிண்டுகள் இருக்கிறதா என ஆராயலாம், அந்த வகையில் மேல்முறையீட்டு வழக்கில் முடிவு தெரியும் வரை அமைதியாக இருக்கலாமே? என்று ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
வழக்கில் என்ன நடந்தது?: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு என்ன?: அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
ஒபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கில்தான் நேற்று அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
