ரஜினிகாந்த் சங்கியா? இல்லையா? கொஞ்சம் ‘டிகோட்’ செய்யலாமா?
சென்னை: ரஜினிகாந்த் சங்கியா? இல்லையா? என்ற புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'லால் சலாம்' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட, ஐஸ்வர்யா, 'அப்பாவை சங்கி என்று சொல்லும் கோவம் வரும். இப்போ சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியா இருந்தா அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார்' என்றார்.

ரஜினியைப் பற்றி அவரது மகள் ஐஸ்வர்யா பேசிய இந்தக் கருத்துகள் சமூக வலைதளத்தில் விவாதத்தை எழுப்பி வருகிறது.
ரஜினி சங்கியா? இல்லையா? என்பதுதான் இப்போது அதிகம் ஆராயப்பட்ட வேண்டிய விசயம். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? இதுதான் கடந்த 30 ஆண்டுகளாக அவர் பற்றிய தலைப்புச் செய்தியாக வலம் வந்தது.
இப்போது அதற்குக் கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. ஆகவே, அடுத்த சம்பவம் ஆரம்பமாகி இருக்கிறது.
அவர் சங்கி இல்லை என்பதற்கு அவரது மகன் சொல்லும் உதாரணம், அவர் லால் சலாம் படத்தில் நடித்தது. அவர் 'காலா' மற்றும் 'கபாலி'யில் கூடத்தான் நடித்திருக்கிறார். அதன் இயக்குநர் தீவிரமான அம்பேத்கரிஸ்ட். அதைத் தெரிந்தேதான் அவரது படத்தில் ரஜினி நடித்தார். அப்போது அவர் அம்பேத்கர் பற்றி நிறைய விவாதித்ததாகவும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதற்குப் பின்னர் எத்தனையோ அம்பேத்கர் நினைவு நாள் வந்தது. பிறந்தநாள் வந்தது. எந்த ஒரு பிறந்தநாளுக்கும் அவர் அம்பேத்கருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறாரா? அல்லது அவரைப் பற்றிப் பேசி இருக்கிறாரா? என்பது முக்கியமான கேள்வி.
கடந்தகால, ரஜினியின் ட்ராக் ரெக்கார்ட்டை கூர்ந்து கவனித்தால் அதற்கு விடை கிடைக்கும். ரஜினி தனது சினிமா வாழ்க்கையைச் சரியாக வகுத்து வைத்துள்ளார். காலத்திற்குத் தகுந்த மாதிரி யார் ட்ரெண்டில் இருக்கிறார்களோ அந்த இயக்குநர் பக்கம் தலைவைப்பார். வாய்ப்புக் கொடுப்பார். அவரை அதன் மூலம் சினிமா உலகில் தக்கவைத்துக் கொள்வார்.
அப்படித்தான் அவர் ஆர்வி உதயகுமார் எடுத்த 'எஜமான்' பக்கம் வந்தார். அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் 'காலா' மூலம் ரஞ்சித் பக்கம் வந்தார். அப்படித்தான் இப்போது 'லால் சலாம்' பக்கம் வந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை சினிமா குதிரையில் அவர் ஏறினார் அது ஜெயிக்க வேண்டும். பல கோடிகள் புரள வேண்டும்.

அப்படி எல்லாம் இல்லை. அவர் கதைக்காகத்தான் படங்களில் நடிக்கிறார் என்றால், அவர் தொடர்ந்து 'வள்ளி' மாதிரியான முயற்சிகளைச் செய்திருப்பார். 'ராகவேந்திரா' மாதிரியான சந்நியாசி கோலத்தில் வலம் வந்திருப்பார். 'பாபா' மாதிரி புதிர் படங்களில் நடிப்பதோடு நின்றிருப்பார். கட்டாயம் 'ஜெயிலர்' பக்கம் வந்திருக்கவே மாட்டார்.
1998இல் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திரைப்பட விருது விழாவில் மு.கருணா நிதி ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அப்போது அந்த விழாவின் தலைவர் ஆளுநர் பாத்திமா பீவி. அவரைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ரஜினி யை புகழ்ந்தார் கருணாநிதி. அதே விழாவில் திமுக ஆட்சி தொடர்வதற்காக அமைச்சர் ஒருவர் தீ மிதித்ததாகப் பேசினார். அவரைக் காட்டுமிராண்டி எனத் திட்டினார் கருணாநிதி.
ஆனால், இதே விழாவில், 'திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்தான் கருணாநிதியின் மனதிற்குள் புகுந்து 'அருணாச்சலம்' படத்திற்கு விருது வழங்கும்படி சொல்லி இருக்கிறார்' என்று ரஜினி பேசியதைப் பகுத்தறிவுக்கு எதிரான கருத்து எனக் கருணாநிதி மேடையிலேயே கண்டிக்கவில்லை. மவுனமாக அதைக் கடந்தார் அவர். ஏனெனில் அப்போது ரஜினி ஆதரவு அவருக்குத் தேவை இருந்தது.

அந்த விழாவில் பேசிய ரஜினி, "பெரியார் இருக்கும்போது கடவுள் இல்லை என்கிற பிரச்சினை. அது இப்போது எடுபடாது'என்றார். அது மிகப் பெரிய சர்ச்சையானது.
அப்போதுதான் இயக்குநர் வேலு பிரபாகரன், "ஏசி காரில் சொகுசாகப் பயணம் செய்துகொண்டு, கலர் கலர் சட்டையில் குரூப் டான்ஸ் ஆடி, கோடிக்கணக்கான ரூபாயை தன் ஒருவனுக்கு மட்டுமே குவித்து வைத்துக்கொண்டு, எந்தச் சமூக அக்கறையும் இலலாமம் அரைகுறை நடிகரான ரஜினி, தமிழனின் முன்னேற்றத்திற்காக 50 ஆண்டுகள் பாடுபட்ட பெரியாரின் கொள்கைகள் இப்போது எடுபடாது என்று உளறக்கூடாது" என்று கண்டித்தார்.
"ரஜினி ஒரு செல்லாக்காசு. அவர் தன்னை எம்.ஜி.ஆர். என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அது தப்பு. எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம், அவரது பகுத் தறிவுக் கருத்துகள்தான். ஆனால், ரஜினிகாந்த் மூடநம்பிக்கையின் மொத்த உருவம்.
பகுத்தறிவு மிக்க சிந்திக்கத் தெரிந்த தமிழக மக்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கின்ற ரஜினியின் திட்டமிட்ட நாடகத்தைக் கண்டிப்பாக முறியடிப்பார்கள்" என்று இயக்குநர் வேலு பிரபாகரன் 1998இல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பின்னாளில் ரஜினிகாந்த், இயக்குநர் வேலு பிரபாகரனுக்கு பொருளாதார உதவி செய்ய, ரஜினியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார் அவர்.
ஜெயலலிதாவின் ஊழலை எதிர்ப்பதற்காக, 1996இல் 'இனி ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது' என்று அறிக்கைவிட்டு, திமுக, தமாகவை அணியை ஆதரித்தார் ரஜினி. அவர் அப்போது திமுகவை ஆதரிக்க முக்கிய காரணம் கருணாநிதி அல்ல. மூப்பானர். இவர் மூலமே அவர் திமுகவை ஆதரித்தார்.
அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகள் அவர் மவுனமாக இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் சமயம் யாரை ஆதரிப்பார் ரஜினி என எதிர்பார்த்து பத்திரிகைகள் காத்திருந்தன.

தனது பொங்கல் அறிக்கை மூலம் திமுக,தமாக கூட்டணிக்கே தனது ஆதரவு தொடரும் என்றார் ரஜினி. அப்போது முரசொலியில் மு.கருணாநிதி, 'இந்த வருடப் பொங்கலிலே கரும்பைவிட, சர்க்கரைப் பொங்கலைவிடவும் இனிப்பாக இருக்கிறது ரஜினியின் வாழ்த்துச் செய்தி' என்று எழுதினார்.
ஜெயலலிதாவை எதிர்ப்பதற்காக அவர் திமுக கூட்டணிக்கு வந்தார். கொள்கை அளவில் அவர் திமுக அரசியலை ஏற்றதே இல்லை. அவரது உள்ளத்தில் பாபாதான் இருந்தார். அதற்கு முன் ராகவேந்திரா இருந்தார்.
இதே காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் செல்வாக்கு திமுக, தமாக கூட்டணியைக் காப்பாற்றவில்லை. ரஜினியின் பழைய செல்வாக்கு இப்போது இல்லை. அவரது செல்வாக்கு சரிந்துவிட்டது என்று பேச்சு அடிப்பட்டது.
அப்போது உயிருடன் இருந்த பத்திரிகையாளரும் திமுக ஆதரவாளருமான சின்னக்குத்தூசி, 'பகுத்தறிவுக் கொள்கையைப் பேசிக்கொண்டு மூகாம்பிகை கோயிலுக்கும் போய்கிட்டு இரட்டை வேஷம் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி. ஆரைவிட ரஜினி வெளிப்படையானவர். அவர் தன் ஆன்மிக அடையாளத்தை மறைத்ததே இல்லை" என்று சொன்னார். இவர் இப்படிச் சொன்னதற்குக் காரணம், வெளிப்படையானது. ரஜினி அப்போது திமுக அணி ஆதரவாளர்.

ரஜினியால் 'லால் சலாம்' படத்தில் நடிக்க முடியும். ஆனால், பெரியார் படத்தில் நடிக்கவே முடியாது. அவர் அதை ஏற்கவே மாட்டார்.
'வள்ளி' படம் வெளியான காலத்தில், விரைவில் நிம்மதியாக நான் இமய மலைக்குப் போய் தங்கிவிடுவேன்' என்றார். ஆனால், அப்படி எதுவுமே நடக்க வில்லை. அது நடக்காது என ரஜினிக்கும் தெரியும்.
பல கோடிகளில் சம்பளம் வாங்கும் அவர், அந்தக் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கச் சாமியார் வேடம் போடுகிறார் என்கிறார்கள் அவரை அறிந்த பலர்.
தமிழ்நாட்டில்தான் 1970களுக்குப் பின் ரஜினி வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் அவர் தமிழ்நாட்டு அரசியலுக்கு எதிர்நிலையில் தான் நின்றிருக்கிறார். அவர் ஆன்மிகவாதியாக இருப்பதில் தவறே இல்லை. அது அவரது உரிமை.
கடந்த கால அவரது கருத்துகளை எடுத்து ஆராய்ந்தால், அவர் பெரியாரை விமர்சித்த அளவு வலதுசாரி அரசியலை விமர்சித்ததே இல்லை. ஆன்மிகத்தை வைத்து நடந்த 'கோத்ரா' ரயில் எரிப்பு அரசியலை விமர்சித்ததே இல்லை.
ராமர் சிலையை உடைத்தார் பெரியார் என அவரை சமீபத்தில் விமர்சித் திருந்தார் ரஜினி. அதே அளவுக்கு அவர் ராமர் பெயரை வைத்துப் பிற மதத்தினர் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டித்ததே இல்லை. மவுன மாக அதை அவர் கடந்தே சென்றிருக்கிறார்.
கோவைக் குண்டு வெடிப்பில் ரஜினி சொன்ன கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சை யை கிளப்பின. ஆனால், கோத்ரா பற்றி அவர் ஏன் அதிகம் பேசவில்லை என்பதில்தான் ஒளிந்திருக்கிறது சூட்சமம்.
ஆரம்பக்காலங்களில் ராகவேந்திராவை குருவாக ஏற்ற ரஜினி, பிற்காலத்தில் பாபா பக்தராக மாறினார். இப்போது ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்று தனது வாழ்நாள் பாக்கியம் என்கிறார். இதற்குள் அவரது விருப்பம் என்னவாக இருக்கிறது என்பதை மக்கள் உணர்வார்கள்.
ரஜினி சாய்பாபாவைப் பார்க்கப் பலமுறை நேரம் கேட்டுக் கொடுக்கப்படவில்லை. இதை அவரே சொல்லி இருக்கிறார். ஆனால், கருணாநிதியைப் பார்க்க வீடு தேடி வந்து சந்தித்தார் சாய்பாபா.
எதற்காகச் சந்தித்தார்? மக்கள் பணி செய்து வரும் ஒரு முதல்வரை வந்து சாய்பாபா சந்தித்தார். அதற்கு முழுக் காரணம் கருணாநிதி முதல்வர் பொறுப்பிலிருந்ததுதான். அதை ரஜினியின் மனம் ஏற்கவில்லை. கருணாநிதிக்குக் கடவுள் அருள் இருந்தது ஆகவே சாய்பாபா வந்து சந்தித்தார் என வரலாற்றை யை மடைமாற்றினார் ரஜினி.
அவர் வெற்றிக்குக் கடவுள் காரணம் என்றால் சரி. ஆனால், முழு பகுத்தறிவு வாதியான மு.கருணாநிதியின் வெற்றிக்கும் கடவுள்தான் காரணம் என ஆருடம் சொன்னால் அது எப்படி நியாயம்?
ஜெயலலிதா என்ற ஒரு பெண்ணை, ரஜினி, மூப்பனார், மு.கருணாநிதி எனப் பலர் சேர்ந்து எதிர்த்து வெற்றி பெற்றனர். இதுதான் வரலாறு. அப்போது ஒரு பெண்மணியை இத்தனைப் பேர் சேர்ந்து எதிர்ப்பதால் ஜெயலலிதா பலசாலி என்று ரஜினி சொல்லவில்லை.
மோடி பற்றி ஊடகங்கள் அவர் வீட்டு வாசலில் நின்று கேள்வி எழுப்பியபோது, 'ஒருவரை இத்தனை பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால், அவர் பலசாலியா? அல்லது அந்த பத்து பேர் பலசாலியா?' என்று புதிர் போட்டார் ரஜினி. அவரால் தமிழ்நாட்டில் நின்று ஜெயலலிதாவை எதிர்த்ததைப்போல வெளிப்படையாக மோடியை ஆதரிக்க முடியவில்லை.அவர் அஞ்சினார்.
கருணாநிதி, தனது சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' 4ஆம் பாகத்தில் ரஜினிக்கு அதிகமாகவே இடங்களை வழங்கினார்.
1996க்குப் பின் இரண்டு தேர்தல்களில் திமுக அணியை ஆதரித்த ரஜினி, பாபா படப் பிரச்சினைக்குப் பின்னர் 2004இல் பாமகவை எதிர்க்கத் தொடங்கினார். ஆகவே, அவர் மறைமுகமாக அதிமுக அணியை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டர். பாமக அப்போது திமுக கூட்டணியிலிருந்தது. அக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, பாஜக வேட்பாளர்களுக்கு ரஜினி ரசிகர்கள் வேலை செய்தனர். ரஜினி தனது ரசிகர் மன்றத்தின் அடையாளமாகப் பாபாவின் கை விரலைத்தான் பயன்படுத்த அனுமதித்திருந்தார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 'நக்சலைட்ஸ் உள்ளே புகுந்ததுதான் காரணம்' என்றார் ரஜினி. கும்பகோணம் மகாமகம் நடந்தபோது சிலர் இறந்தனர். அப்போது எந்த 'நக்சலைட்ஸ்' உள்ளே புகுந்தார்கள் என அவர் விளக்கவில்லை.
இப்படி, ரஜினி கடந்தகால ட்ராக் ரெக்கார்ட்டை ஆராய்ந்தால் அவர் யார் எனப் புரியும். அதில் அவர் சங்கியா? இல்லையா? எனத் தெளிவாகத் தெரியும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications