நீட் தேர்வில் நாடகமாடுவது திமுகவா? அதிமுகவா? ஆதாரங்களை அடுக்குகிறார் எழிலன்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போரை திமுக வேகப்படுத்தி வருகிறது. செங்கல் கையுடன் தேர்தல் நேரத்தில் வலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது 'முட்டை'யைக் கையில் எடுத்துள்ளார்.
பல மணிநேரம் பேசி புரியவைப்பதைவிட, ஒரு பொருளைக் காட்டி மக்களுக்கு முழு விஷயத்தையும் புரியவைத்துவிடுகிறார் அவர். அதற்கு முன் இப்படி 'குறியீடு'களைக் காட்டி அரசியல் செய்தவர்கள் மிகமிக குறைவு. அதில், பிஹெச்டியே வாங்கிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பற்றி மேலும் சில விளக்கங்கள் பெற திமுக மருத்துவ அணிச் செயலாளர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதனிடம் பேசினோம்.
அவர், "திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலம். அப்போது ஸ்டாலின் அவர்கள் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து செயல் தலைவராகப் பதவியேற்ற நேரம். அப்போது திமுக பொதுக்குழு நடந்தது. அன்றைக்குப் போடப்பட்ட முதல் தீர்மானம் நீட் தேர்வுக்கு எதிரானதுதான்.

அடுத்து செயல் தலைவரிலிருந்து கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போதும் பொதுக்குழு கூடியது. அன்றும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை திமுக போட்டது.
சொல்லப் போனால் அனிதா இறப்புக்கு முன்பாகவே திமுக தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளது. அந்தக் கொள்கையிலிருந்து திமுக என்றைக்கும் விலகியதே இல்லை.

சட்டமன்றத்தில் நீட் தொடர்பான கேள்விகள் வரும்போது எல்லாம் 'நீட்' எப்படி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது அல்லது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது என்பதை எடுத்துப் பேசிக்கொண்டேதான் வருகிறோம். அதில் என்றும் பின்வாங்கியதில்லை.
ஆனால் அதிமுகதான் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம்தான் போட்டு வந்துள்ளது. ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும்போது அது நீட் தேர்வுக்கு எதிராகப் பேசியதே இல்லை. ஆளும் கட்சியாக இருந்த போதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கருத்தையும் முன்வைத்ததில்லை.

குறிப்பாக ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கேட்டு போராட்டம் நடத்துவதைப்போல நடித்துவிட்டு, அதில் அக்கறைகாட்டாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அன்றைக்குக் கல்வி அமைச்சராக இருந்த மஃபா பாண்டியராஜன் தனியாக ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டே இருந்தார்.
அதே அதிமுக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நாங்கள் ஒரு ஆண்டுக்கு விலக்குக் கேட்டு வருகிறோம் என்று பேசிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் நீட்டுக்கு எதிராக திமுக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருந்தது.

அதிமுக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது அனைத்துக்கட்சி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு திமுக ஆதரவு கொடுத்தது. ஆனால், அதை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். அந்தத் தகவல் யாருக்கும் சொல்லவில்லை. சட்டமன்றத்திலும் அதிமுக சொல்லவில்லை. மக்கள் மன்றத்திலும் சொல்லவில்லை. இந்த செய்தியையே அ.தி.மு.க அரசு மறைத்துவிட்டது.
தயவு செய்து அதிமுக தேர்தல் அறிக்கையைப் படித்துப் பாருங்கள். அந்த அறிக்கையில் நீட் தேர்வை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு நாடகங்களையும் நடத்திவிட்டு, அவர்கள் திமுக நாடகமாடுகிறது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? மக்கள் நம்புவார்களா? இது கேலிக்குரிய விசயம் என மக்களே சொல்வார்கள்" என்றவர் மீண்டும் சில விளக்கங்களை முன்வைத்துப் பேசத் தொடங்கினார்.

"முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், நீட் விவகாரத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு சட்ட முன் முடிவுக்கும் ஒரு கமிட்டி போடப்பட்டது. 'நுழைவுத்தேர்வு ரத்து சட்டம்' 2007இல் கொண்டுவந்தபோது அன்றைக்கு கலைஞர் மு.கருணாநிதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டியைப் போட்டார்.
எந்த எந்த வகைகளில் இந்த நுழைவுத்தேர்வானது கிராமப்புற மாணவர்களை மருத்துவ படிப்பில் நுழையவிடாமல் தடுக்கிறது என்பதை ஆய்வுசெய்து, அந்தக் கமிட்டி வழங்கிய அறிக்கையைக் கொண்டு சட்ட முன்வடிவை தயாரித்து பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார். அதன்பின்னர் தான் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதேமாதிரிதான் நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் ஒரு கமிட்டியை அமைத்தது. அதன் அறிக்கையை அடிப்படையில் சட்ட முன்வடிவை உருவாக்கி, அனைத்துக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ரவி அதை அப்படியே வாங்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு திரும்ப அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி ஆளுநருக்கு முதல்வர் அனுப்பிவைத்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் முரணாக ஒரு சட்டம் இருந்தால், அதைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஆகவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அதன்பிறகு பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது அழுத்தம் தருகிறார் முதல்வர் ஸ்டாலின். மீண்டும் காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரைச் சந்திக்கும்போதும் 'நீட்' விலக்குக் கேட்டார். இத்தனை நடவடிக்கைகளையும் திமுக நேரடியாகச் செய்துள்ளது. மக்கள் மன்றத்தில் இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஆனால் அடிக்கடி பிரதமர் மோடியை ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் சந்தித்தபோது இப்படி வெளிப்படையாக நீட்டுக்கு எதிராகக் கோரிக்கை வைத்திருக்கிறார்களா? ஒரு வார்த்தை பேசி இருக்கிறார்களா?.
அவர்கள்தான் இப்போது பாஜகவைவிட்டு வெளியே வந்துவிட்டோம் என்று கூறி நாடகமாடி வருகின்றனர். அவர்கள் திமுக நாடகமாடுகிறது எனச் சொல்வது நகைப்பாக இருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications