இருமொழி.. தேன்கூடா அல்லது திமுகவின் அரசியலா? திமுக எம்பிக்களின் சம்பவத்தின் பின்னணி
சென்னை: இந்தி திணிப்பு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, ஒற்றுமையாக உள்ளன. தமிழ்நாட்டை 60 ஆண்டுகளாக ஆண்டு வரும், திமுக, அதிமுக இரண்டுமே எந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ.. இல்லையோ.. இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளனர். இதனை தேன்கூடாக திமுக பார்க்கும் நிலையில், பாஜகவோ இது அரசியல் என்று பார்க்கிறது.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் நேற்று செய்த சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் திமுக, பாஜக இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டு வருகிறது. தேசியக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.. இதனை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஸ்டாலின் அதிரடி பதில்
இதனிடையே இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதியாக இருந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என கடந்த மாதம் அறிவித்தார். வெறும் இந்தி திணிப்புக்காக மட்டுமின்றி வேறு பல காரணிகளுக்காகவும் அந்த கொள்கையை எதிர்ப்பதாகவும், அவற்றால் தமிழக மாணவர்களின் எதிர்கால நலன்கள் பாதிக்கப்படும் என்றும் கடந்த மாதம் கடலூரில் நடந்த போராட்டத்தின் போது தெரிவித்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் காலை 11 மணிக்கு கூடியதும் கேள்விநேரம் நடைபெற்றது. இதில் பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் துணைக்கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் பேசும் போது, "புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு எதிர்த்ததால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டுக்காக முதலில் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கல்வி உரிமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. கல்விக்கொள்கையை நிராகரிப்பதற்காக எந்த மாநிலமும் நிதி வெட்டுக்களை எதிர்கொள்ளாது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளிக்குமா?" என்று கேட்டார்.

தர்மேந்திர பிரதான் பதில்
இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்து பேசுகையில், "பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த பல மாதங்களில் தமிழக அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.. ஒருகட்டத்தில் அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தனர். ஆனால் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி உள்ளாம். இந்த எம்.பி.க்கள், என்னை சந்திக்க வந்திருந்தனர். கேள்வி கேட்ட உறுப்பினரும் கூட (தமிழச்சி தங்கப்பாண்டியன்) வந்தார். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சரும் வந்தார். அவர்கள் இந்த திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.
நாகரிகமற்றவர்கள்
என்னை பார்த்துவிட்டு திரும்பிய பின் 'பல்டி' அடிக்கிறார்கள். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுகிறார்கள். அவர்களது எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள், மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் " என்று கூறினார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்
இதனிடையே தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. உடனே அவர் திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பிரச்சினையை கிளப்பியுள்ளது. தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தன.
மன்னிப்பு கேட்ட தர்மேந்திர பிரதான்
இதற்கிடையே தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மற்றும் தமிழகத்தில் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதற்கிடையே நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றி கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், தமிழ்நாட்டில் சிறுபான்மை பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் 774 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாக கூறினார்.
அதேநேரம் மக்களவையில் நேற்று முன்தினம் தமிழக எம்.பி.க்களை தரக்குறைவாக பேசியதாக எழுந்த சர்ச்சை குறித்து மன்னிப்பும் கேட்டார்.

100 முறை மன்னிப்பு
தர்மேந்திர பிரதான் அப்போது கூறும் போது 100 முறைகூட மன்னிப்பு கேட்பேன். அதில் எனக்கு எந்த கவுரவக் குறைவும் இல்லை என்று கூறியவர், தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என பிரதமர் மோடி பல முறை சொல்லியிருக்கிறார். தமிழ் மொழி யாருக்கும் முற்றுரிமையாக இல்லை. யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறி தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார்.
மொழிப்பிரச்சனை
இந்த கடிதத்தை அவர் தனது 'எக்ஸ்' தளத்திலும் பதிவிட்டார். அதில் அவர் கூறும் போது, "நாடாளுமன்றத்தில் பேசிய எனது வார்த்தையில் நான் உறுதியாக இருக்கிறேன், 2024-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதியிட்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒப்புதல் கடிதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழக மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது.
மொழிப் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாகப் பயன்படுத்தி, அவர்களின் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது அவர்களின் ஆட்சி.

பிற்போக்கு அரசியல்
தி.மு.க.வின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழகத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கும், மாணவர்களுக்கும் பெரும் அவமானமாகும். குழந்தைகளின் நலனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் தேசிய கல்விக் கொள்கையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்' என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
பிடிஆர் பதிலடி
இதனிடையே தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,. தோல்வி அடைந்த மும்மொழி கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். முழுமையாக தோல்வியடைந்த மாடலை கொண்டு வந்து, வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்னங்க அர்த்தம்? என்று கேட்டதுடன் அறிவுள்ளவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அறிவு இருப்பவர்கள் ஏற்பார்களா
சுயமரியாதை எல்லாம் இரண்டாவது தான் என்றும் அறிவு இருப்பவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்றும் பிடிஆர் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கை முதன் முதலில் 1968 ஆம் ஆண்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது என்றும் அன்று முதல் இன்று வரை மும்மொழிக் கொள்கை என்று சொல்லி வருகிறார்கள் என்றும் 57 வருடங்கள் ஆகியும் மும்மொழிக் கொள்கையை எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அண்ணாவின் வார்த்தைகள்
யாரெல்லாம் தமிழ்நாட்டைப் போல இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ அங்கு, தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது என்று கூறிய பிடிஆர், அண்ணாவின் வார்த்தைகளை கூறினார். நமக்குத் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்றார் அண்ணா. உத்தர பிரதேசத்திலோ, பீகாரிலோ, மத்திய பிரதேசத்திலோ இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி இருந்திருந்தாலே நமக்கு 3வது மொழியே தேவைப்படாது என்றும், இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றும் கூறினார்.
ஏழை மாணவர்கள்
அதேநேரம் பாஜக தரப்பு வைக்கும் வாதமோ, மும்மொழி வேண்டாம் என்று கூறும் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களின் குழந்தைகளுமே மும்மொழி படிப்பதாகவும், ஆனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மட்டும் மும்மொழி படிக்க அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகிறது. மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
தேன்கூடு vs அரசியல்
இதனிடையே இந்தியாவிலேயே இந்தியை ஏற்காத மாநிலம் என்றால் தமிழ்நாடு மட்டுமே.. தமிழ்நாட்டில் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையை மும்மொழிக் கொள்கையாக மாற்ற எந்த காலத்திலும் ஒப்புக்கொண்டது இல்லை.. அதேநேரம் விரும்பி படிப்பதை தாங்கள் தடுக்கவில்லை என்றும் கூறி வருகின்றன. இறுதியாக இருமொழிக் கொள்கையை மாற்ற முயல்வது என்பது தேன்கூட்டில் கைவைப்பது போன்றது என்பது திமுகவின் வாதமாக உள்ளது. பாஜகவோ, இது திமுகவின் அரசியல் என்று கூறி வருகிறது. மக்கள் தான் இது என்ன என்பதை முடிவு செய்வார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தை அதிர வைத்ததன் மூலம் திமுக இருமொழிக்கொள்கையை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் என்பது தெரிகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications