ஜனநாயகன் சர்ச்சையால் உருவாகும் தவெக- காங்கிரஸ் கூட்டணி? ஆனால் "அவர்" மவுனமா இருக்காரே!
சென்னை: ஜனநாயகன் படம் சென்சார் விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், இதற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வரிசையாக சப்போர்ட்டிற்கு வந்துள்ளனர். இதனால் தவெக- காங்கிரஸ் கூட்டணி உருவாகுமோ என்ற பேச்சு எழுந்துள்ளது. இது தமிழக அரசியலில் என்ன மாதிரியான போக்கை ஏற்படுத்தியுள்ளது.. இந்த விவகாரத்தால் கூட்டணி அமையுமா என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஜனநாயகன் திரைப்படம் முதலில் நாளை ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே சென்சாரை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் இதை ஏற்கவே முடியாது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்க்கு சப்போர்ட்டாக வந்துள்ளனர்.

தராசு ஷ்யாம்
இதைக் குறிப்பிட்டு வரும் சட்டசபைத் தேர்தலில் தவெக- காங்கிரஸ் கூட்டணி அமையும் எனப் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற கோஷம் காரணமாக திமுக- காங்கிரஸ் இடையே லேசான விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது நடப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதற்கிடையே மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஜனநாயகன்
இது தொடர்பாகத் தராசு ஷ்யாம் புதிய தலைமுறை டிவி சேனலிடம் கூறுகையில், "தனிக்கை தாமதம் என்பது கண்டிக்கத்தக்கது.. அதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இதை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இதை முடிக்க வேண்டும். தனிக்கையே செய்யப்படாமல் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. இன்னமும் நாம் எதற்காக இந்தப் பழைய தணிக்கை விவகாரங்களைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.
இதுபோல தனிக்கை சான்றிதழை வழங்கத் தாமதம் செய்வது படத்தின் வசூலையும் பாதிக்கும். படத்தில் எத்தனையோ பேர் உழைத்து இருப்பார்கள் அவர்களைப் பாதிக்கும். மக்களைப் பாதிக்கும். எனவே தனிக்கே ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது.
தவெக- காங்கிரஸ்
அதேநேரம் இதில் அரசியல் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டும். அரசியல் இருக்கிறதா என்பது எனக்குக் கொஞ்சம் சந்தேகம் தான். காரணம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி அப்படியே திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தாலும், விஜய் கூட்டணியில் சேர முடியுமா? எத்தனை சீட்டு தருவார்கள்? எவ்வளவு ஜெயிக்க முடியும்? இதெல்லாம் கேள்விக்குறி தான்.
காரணம் விஜய் இதுவரை பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களைச் சேர்ப்பதைப் பார்த்தால் குறைந்தபட்சம் அங்குச் சேருவோருக்கு வந்து உள்ளூர் செல்வாக்காவது இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தேதிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தைத் தவிர வேறு பெரிய குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு இல்லை. சராசரியாக 3 முதல் 4% ஓட்டு தான் இருக்கும்!
சிக்கல் இதுதான்
மேலும், திமுக என்றால் அவர்கள் அடிமட்டத் தொண்டர்கள் உழைத்து கூட்டணிக் கட்சியைக் கரை சேர்த்து விடுவார்கள். மறுபுறம் தவெக தொண்டர்களுக்கு இதுதான் முதல் தேர்தல். அவர்கள் உழைப்பார்களே தவிர.. தேர்தல் நேக்கு, வாக்குப்பதிவு நேக்கு எல்லாம் தெரியாது. கடைசி 20 நாள் பணி முக்கியம். அதற்குப் பெரிய அனுபவம் தேவை. எனவே, தவெகவை நம்பி காங்கிரஸ் களத்திலே இறங்கினால் கஷ்டப்படுவார்கள்.
மவுனம்
அதேநேரம் புதிதாக முயன்று பார்க்கலாம்.. காங்கிரஸை வளர்க்க ஒரு வாய்ப்பு எனக் கூட அவர்கள் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நினைத்தால் சாத்தியம் உள்ளது. இந்தப் பட விவகாரம் குறித்து ராகுல் காந்தி இதுவரைக்கும் எதுவும் சொல்லவில்லை. அதையெல்லாம் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் ஜனநாயகன் சென்சார் என்பது ஒரு அரசியல் ஆகிவிட்டது.
பராசக்தி படத்திற்கும் கூட சென்சாரில் பிரச்சனை இருந்தது. ஆனால், அவர்கள் ரிவைசிங் கமிட்டிக்கு போய் அதை முடித்தார்கள். இவர்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை. அதில் அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். அரசியல் எப்படிச் செய்கிறார்களோ அதேபோல படத்தையும் திட்டமிடாமல் செய்துவிட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications