"பிரியா ஆத்மா சாந்தியடையட்டும்.." தனது கோலை பிரியாவுக்கு சமர்ப்பித்த சென்னை வீரர் பரெடோ! நெகிழ்ச்சி
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடந்து வரும் நிலையில், நேற்றைய போட்டிக்குப் பின் சென்னையின் எப்சி வீரர் பரெடோ செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின்னர், அதேபோல பல்வேறு லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன. அப்படித்தான் 2013இல் ஐஎஸ்எல் தொடங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் இந்த ஐஎஸ்எல் போட்டிகளில் இப்போது மொத்தம் 11 அணிகள் உள்ளன. இந்தாண்டிற்கான லீக் போட்டிகள் அக். 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஐஎஸ்எல்
இதில் சென்னை அணி நேற்றைய தினம் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் சென்னை அணி களமிறங்கியது. அந்த போட்டி தொடங்கிய 26ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ஸ்லிஸ்கோவிச் அட்டகாசமாக ஒரு கோலை அடித்தது. இதன் மூலம் சென்னை 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு வந்தது.

கோல்
இருப்பினும், விடாமல் போராடிய ஜாம்ஷெட்பூர் அணி 75ஆவது நிமிடத்தில் கோலை அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என்ற சமனுக்கு வந்தது. இந்த கோல் அடித்த மறுநிமிடமே வின்சி பரெடோ மற்றும் நாசர் ஆகியோர் சப்ஸ்ட்டியூட் வீரர்களாகக் களமிறக்கப்பட்டனர். வந்த உடனேயே வின்சி பரெடோ சூப்பர் கோல் ஒன்றை அடித்தார். இதன் மூலம் சென்னை அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

வெற்றி
அதைத் தொடர்ந்து 84ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் மூன்றாவது கோலை அடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்க ஜாம்ஷெட்பூர் வீரர்கள் கடுமையாக முயன்றனர். இருப்பினும், சென்னை அணி வீரர்களின் வலுவான தடுப்பு ஆட்டத்தால், உறுதிவரை ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.

வின்சி பரெடோ
சென்னை அணி தனது சொந்த மைதானமான நேரு ஸ்டேடியத்தில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, அதில் 3 போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே இந்தப் போட்டிக்குப் பின்னர் சென்னையின் வெற்றி கோலை அடித்த வின்சி பரெடோ கூறிய கருத்துகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரியாவுக்கு சமர்ப்பணம்
இந்தப் போட்டி நடந்த பின்னர் பேசிய வின்சி பரெடோ, சென்னை அணிக்காகத் தான் அடித்த கோலை உயிரிழந்த சென்னை கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சென்னை அணி ரசிகர்கள், அவர் டக்கென இப்படிச் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனார்கள். இதற்காக நெட்டிசன்கள் பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்

பிரியா
சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா. கல்லூரி படித்து வரும் இவர், கால் வலியால் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்து கொண்டார். இருப்பினும், அதைத் தொடர்ந்து திடீரென அவருக்குக் கால் வலி தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டா நிலையில், அங்கு பிரியாவின் கால் அகற்றப்பட்டது. அதன் பின்னரும் கூட பிரியாவின் கால் வலி குறையாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர்கள்
மாணவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பது மருத்துவக் குழு நடத்திய தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இப்போது தலைமறைவாக இருக்கும் மருத்துவர்களைத் தேடி வருகின்றனர். மருத்துவர்களின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கவே நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அடித்த கோலை பிரியாவுக்கு சமர்ப்பித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் வின்சி பரெடோ!












Click it and Unblock the Notifications