‛சுதந்திரம்’.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஈபிஎஸ்ஸை வாழ்த்திய கிருஷ்ணசாமி.. திமுகவை வீழ்த்த ஐடியா.. ஆஹா
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும் எனக்கூறி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அங்கீகாரம் அளித்தது. மாறாக ஓ பன்னீர் செல்வம் நீக்கத்தையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளதோடு, தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசை வீழ்த்த ஐடியா ஒன்றையும் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு திடீரென்று அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

இடைக்கால பொதுச்செயலாளரான ஈபிஎஸ்
இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
இந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அமைந்தது. இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஈபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி
ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் அவரது நீக்கத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெளிவு பிறந்துள்ளதாக..
இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்றுள்ளது. இதுபற்றி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக நிலவி வந்த ஐயப்பாடுகள் நீங்கி தெளிவு பிறந்துள்ளது.

சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு
‛‛வாய்மையே வெல்லும்'' என்பதற்கு இணங்க இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீங்கி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் முழு சுதந்திரத்துடன் செயல்பட சிறப்புமிகு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத இவ்வரசிடமிருந்து மக்களை காப்பாற்ற தோழமைகளை வலுப்படுத்தி தமிழகத்துக்கு நிரந்தர விடிவு காலத்தை உருவாக்க வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications