சென்னை மெட்ரோ ரயிலுக்கு 1 ரூபாய் நிதி ஒதுக்காத பாஜக அரசு.. அறிக்கையில் அம்பலம்
சென்னை: நாட்டிலேயே தமிழ்நாட்டில் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு மிகக் குறைந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கி, தமிழக மக்களை வஞ்சித்து வருவது அறிக்கை ஒன்றின் மூலம் அம்பலமாகி உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத் தலைநகரங்களில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மெட்ரோ ரயில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னை மெட்ரோ ரயில் 42 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் இதன்மூலம் 2 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

சென்னை மக்களின் அன்றாட தேவைக்கு அத்தியாவசியமாக மாறி இருக்கிறது மெட்ரோ ரயில் பயணம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏறினால், குறிப்பிட்ட நேரத்தில் எந்த விதமான தங்கு தடையும் இல்லாமல் மிக வசதியாகப் போய் சேர முடியும் என்பது இதன் சிறப்பாக உள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் அதிகம் இந்தப் பயணத்தை விரும்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பாஜக அரசு நாட்டிலேயே மிகக் குறைந்த நிதியைத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் சேவைக்கு ஒதுக்கி, தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது மக்களவையில் தரப்பட்ட தகவல் மூலம் இப்போது அம்பலமாகி உள்ளது.

இந்த மெட்ரோ ரயில் சேவையானது மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் செயல்பட்டு வந்தாலும், இதில் பெரும் பங்கு நிதியானது மத்திய அரசின் மூலமே ஒதுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2018-19 நிதியாண்டு முதல் தற்போதைய நடப்பு நிதியாண்டு வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் கஜனன் கீர்த்திகர் மற்றும் ஸ்ரீ கிருபால் பாலாஜி துமனே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள அறிக்கையின்படி நாட்டிலேயே தமிழ்நாட்டில் இயங்கிவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்குத்தான் மிகக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையின் படி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2018 -19 முதல் 2023-24 வரையான நிதியாண்டில் மொத்தமாக ரூ. 28,493 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்போல் கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.17,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி- உ.பி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மட்டும் இந்த நிதியாண்டுகளில் ரூ 16,189 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதேபோல டெல்லி- உ.பி. - ஹரியான மெட்ரோ ரயில் பணிகளுக்காக ரூ. 13,424 கோடியையும் மேற்கு வங்கம் கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகளுக்காக ரூ 13,109 கோடியையும் ஒதுக்கியுள்ளது.

இந்த வரிசையில் குஜராத் மாநில மெட்ரோவுக்கு ரூ. 12,867 கோடி, உத்திரப் பிரதேச மெட்ரோவுக்கு ரூ. 11,565 கோடி, மத்தியப் பிரதேசம் மெட்ரோவுக்கு ரூ.3,779கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ர்யில் திட்டத்திற்கு இந்த ஆறு ஆண்டுகளில் வெறும் ரூ.3,273 கோடியை மட்டுமே இதுவரை ஒதுக்கியுள்ளது.
மேலும் 2023-24 நிதியாண்டுகளில் மத்திய அரசு ஒரு ரூபாய் நிதியைக் கூட ஒதுக்கவில்லை. அதைப்போலவே 05.12.2023 வரை ஒரு ரூபாயைக் கூட ஒதுக்கவே இல்லை என்று உண்மை இப்போது அம்பலமாகி உள்ளது.

இந்த நிதியானது நாட்டிலேயே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ள மிகமிக சொற்ப தொகையாகும். இதிலிருந்து மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று திமுக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு நிஜம் என்று நிரூபணமாகி உள்ளது.
"சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலாகட்டும் அல்லது ஃபேஸ் 2 மெட்ரோ திட்டமாகட்டும் இரண்டையும் நாம் சேர்த்துத்தான் பேச வேண்டும். இந்த ஃபேஸ் 2 மெட்ரோ ரயில் பணிக்கு மட்டும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்த 70 ஆயிரம் கோடி ரூபாயில் இதுவரை 1 ரூபாயைக் கூட மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த நிதியையும் தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கடன்வாங்கியோ அல்லது சொந்த நிதியிலிருந்தோ செலவு செய்து வருகிறது.

இந்திய அளவில் அதிக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசுக்கு அளிக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு இருந்துவருகிறது. ஆனால், அவ்வளவு வரியைத் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஒரு பைசாகூட வழங்காமல் வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்கிறார் சமூக ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்.
இதற்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் வேறு விதமாக விளக்கங்கள் அளிக்கலாம். மற்ற மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில்களின் நீளம் அதிகம். அதனுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு குறைந்த தூரத்தையே கொண்டுள்ளது. ஆகவே வேறு மாநில ரயில் நிதியுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று சொல்லலாம்.

ஆனால், அதிலும் தமிழ்நாட்டுக்கு நியாயம் செய்யப்படவில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் மொத்தம் 54 கிமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை இயங்கி வருகிறது. அதற்கு மத்திய அரசு 6 ஆண்டுகளில் 3,273 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. ஆனால், அதே நிதியாண்டில் குஜராத் மாநில மெட்ரோவுக்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா? 12,867 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மொத்த நீளம் 54 கிமீட்டர். குஜராத்தின் மொத்த நீளம் வெறும் 39கிமீட்டர்தான்.
அதைவிடக் குறைவான 32கிமீட்டர் நீளமுடைய உத்திரப் பிரதேச மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 11,565 கோடியை வாரிக் கொடுத்துள்ளது. இந்த நிதித்தொகை எதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தனியே விளக்கம் தரத் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications