கரூர் தவெக கூட்டத்திற்குள் "குண்டர்கள்" வந்துவிட்டார்களாம்.. ஆதவ் அர்ஜுனா பிரமாண பத்திரம் தாக்கல்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானது, காவல்துறையினராலும், உள்ளூர் ரவுடிகளுடன் சட்டவிரோதத் தொடர்பு கொண்ட உள்ளூர் அரசியல்வாதி ஒருவராலும் திட்டமிடப்பட்டது என்று தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளது.
செப்டம்பர் 28 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர விசாரணை கோரப்பட்டது. ஆனால் நீதிபதி அவர்களை செப்டம்பர் 30 முதல் விடுமுறை கால அமர்வுக்கு அனுப்பினார். நாளை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

தவெக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரம்
TVK சார்பாக ஆதவ் அர்ஜுனா தனது பிரமாண பத்திரத்தில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) காவல்துறையினரையும், உள்ளூர் ரவுடிகளையும் பயன்படுத்தி வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மின்சாரத்தைத் துண்டித்ததாகவும், உண்மையை மறைக்க நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த துயரத்தை ஆளும் DMK orchestrate செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விஜய் பேச்சு தொடங்குவதற்கு முன்பே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டார். பேரணியில் ஊடுருவிய சமூக விரோத சக்திகள், தங்கள் தலைவர் விஜயையும், அவரது பேச்சை கேட்கக் காத்திருந்த பொதுமக்களையும் நோக்கி செருப்புகளையும் கற்களையும் வீசியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
செருப்புகளையும் கற்களையும் வீசியதாக புகார்
நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் ஓட்டப்பட்டதாகவும், காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியதாகவும், இதனால் பீதியை அதிகப்படுத்தியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூட்டம் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவதற்கு முன்பே, காவல்துறை செயல்படத் தொடங்கி பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதாக பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகளின் தயார்நிலை, பிரேதப் பரிசோதனை நேரங்கள் எல்லாம் இவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருப்பதை உணர்த்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இறந்த அனைவர்க்கும் நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், முதல்வர் வருவதற்கு முன்பே இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டப்பட்டது.
எல்லா மருத்துவர்களும் எப்படி மருத்துவமனைக்கு உடனே கொண்டு வரப்பட்டு செய்யப்பட்டார்கள் என்பது சந்தேகமாக உள்ளது, என்று ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் கூறி உள்ளார்.
தமிழக அரசு கொடுத்த விளக்கம்
கரூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசு சார்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
கரூரில் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள் என்ற கேள்விக்கு வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ள தமிழக அரசு, காவல்துறையினருக்கு விஜய் நன்றி தெரிவிப்பதையும் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு காவல்துறையினர் முதலுதவி செய்வதையும் அவர்களை மீட்பதையும் சுட்டி காட்டி விளக்கம் அளித்துள்ளனர்
சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. அதில், தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது; 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்"
அமுதா ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்
காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால்தான் அவர் காவல்துறைக்கு நன்றி சொன்னார். காவல்துறை இல்லையென்றால் இங்கே வந்திருக்க முடியாது என்று விஜய் கூறி இருந்தது இதற்கு உதாரணம். போலீசார் தடியடி நடத்தவில்லை.
வாகனம் செல்ல, ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாத போது, கூட்டத்தை நகர்த்தி, போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். தடியடி எல்லாம் நடத்தவில்லை. ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு வந்தது. அதற்கான ஆதாரங்கள் இதோ (ஆம்புலன்ஸ் கால் ரெக்கார்டிங் ஆதாரங்களை காட்டுகிறார்). விஜய் வரும் போதே அவரை பின்தொடர்ந்து பெரிய கூட்டமும் வந்தது.
அங்கே வந்த ஆம்புலன்சுகள்., அதாவது 7 ஆம்புலன்சுகள் அவர்களின் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருந்த ஆம்புலன்சுகள். அவர்களின் கட்சியின் வந்த ஆம்புலன்ஸ்கள் போதவில்லை என்ற பின்புதான் 108 ஆம்புலன்சுகள் வந்தன. கரூரில் விஜய் பேசும் போது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் இந்த வீடியோவில் உள்ளன. அவர் பேசும் போது முழுமையாக மின்சாரம் இருந்தது. போலீஸார் தொண்டர்களை விலக்கிவிட்டனர்; தடியடி நடக்கவில்லை., என்று தமிழக அரசு கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications