ஆளுநர் ரவியை சந்திக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி! ராஜ்பவனில் ‘டைம்’ கேட்டுள்ளதாக தகவல்! இதற்குத் தானா?
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளுநர் ஆர்என் ரவியை அவரது மனைவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ராஜ்பவனில் நேரம் கேட்கப்பட்டிருக்கும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு, சரணடைந்திருப்பவர்கள் வேறு என தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழந்திருக்கிறது. இதற்கிடையே ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார். ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த தொடர்பாக போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது துப்பாக்கியை எடுத்து சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து திருவேங்கடத்துடன் உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென அதிமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி நேரில் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநரை நேரில் சந்தித்து மனு வழங்குவதற்காக ராஜ் பவனில் தேதி மற்றும் நேரம் கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நேரம் ஒதுக்கப்பட்ட உடன் அவர் ஆளுநரை சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் வேறு எனவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வேறு எனவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதோடு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகின்றனர். மேலும் சிபிசிஐடி வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொலையின் போது திருவேங்கடம் பொன்னை பாலு உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்த காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளதன் மூலம் கொலை வழக்கில் தற்போது கைதாகி இருப்பவர்கள் தான் உண்மையான கொலையாளிகள் என்பது தெளிவாகி இருப்பதாக காவல் துறையினரும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications