இதுதான் அம்மா அரசின் தமிழ்நாடு மாடல் - திராவிட மாடலுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி கருத்து
சென்னை: கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, திராவிட மாடல் என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை செய்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது தான் அம்மா அரசின் தமிழ்நாடு மாடல் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலம் தமிழ்நாடு
ஃபின்டெக் என்ற தனியார் நிறுவனம் நாடு முழுவதும் பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் 2 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2020 - 2021 நிதியாண்டில் GDSP என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் மொத்தம் ரூ.19.02 லட்சம் கோடி என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

10 ஆண்டுகளில் 10.87% வளர்ச்சி
தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 10.87% வளர்ச்சி அடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கபட்டு உள்ளது. இதில் சேவைத் துறையின் பங்கு கணசமானது எனவும், அதன் பங்கு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49.4% என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

தேசிய சராசரியை விட 94% அதிகம்
சேவைத் துறை மற்றும் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இதனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளதுடன் மக்களின் வாழ்க்கை தரமும் முன்னேறி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் என்பது தேசிய சராசரியை விட 94% அதிகம் என அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அம்மா அரசின் தமிழ்நாடு மாடல்
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதுதான் அம்மா அரசின் தமிழ்நாடு மாடல் எனக்குறிப்பிட்டு உள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில், "2020-2021ல் தமிழகத்தின் வருவாய் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 94%அதிகரித்திருந்ததையும், அம்மா அரசு ஆட்சியில் இருந்த 10ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரம் 10.87% உயர்ந்திருந்ததையும் இன்றைய ஆட்சியாளர்களே மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டிருப்பது தான் அம்மா அரசின் தமிழ்நாடு மாடல்." எனக் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications