ராமநாதபுரம் சீட் எங்களுக்குத்தான் வேணும்.. விடாப்பிடியாக முஸ்லீம் லீக்.. தடுமாறும் திமுக புள்ளிகள்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டுள்ளது ஐ.யூ.எம்.எல்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக குழுவினர் நடத்தினர்.
இன்று திமுக பேச்சுவார்த்தை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - விசிக இடையே இன்று நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 4 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியைக் கேட்டுள்ளது முஸ்லீம் லீக் குழு. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி.
ராமநாதபுரம் சீட் வேணும்: திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் காதர் மொய்தீன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்க கோரியுள்ளோம். முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசிய பின் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்"
எனத் தெரிவித்தார்.
திமுக புள்ளிகள் கலக்கம்: ராமநாதபுரம் தொகுதியை இந்த முறை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கக்கூடாது, திமுகவே போட்டியிட வேண்டும் என திமுகவினர் பலரும் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன் திலீப் கண்ணப்பனுக்கு சீட்டை வாங்கித் தர காய்நகர்த்தி வருகிறாராம். தென் சென்னை இல்லாவிட்டால் ராமநாதபுரத்தை தனக்கு தருமாறு அழுத்தம் கொடுக்கிறாராம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
இன்னொரு புறம், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தியும் தலைமையில் துண்டு போட்டு வைத்துள்ளாராம். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு உதயநிதியின் ஏகபோக ஆதரவு இருப்பதால், உதயநிதி கோட்டாவில் சீட் கொடுக்கப்படும் என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் முஸ்லீம் லீக் கட்சி, ராமநாதபுரத்தை விடாப்பிடியாக கேட்டு வருவது திமுக தரப்புக்கு தலைவலி ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications