எம்பி நவாஸ் கனியிடம் இப்படியா? அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபனா மன்னிப்பு கேட்கனும்! முஸ்லிம் லீக் காட்டம்
சென்னை: ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.

இந்த நிலையில் அறிவித்த நேரத்துக்கு முன்பாகவே இந்த விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எம்பி நவாஸ் கனி விழாவுக்கு வரும் முன்பே அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்பி நவாஸ் கனி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இரு தலைவர்களுடன் வந்த அவரவர்களின் ஆதரவாளர்களும் அங்கே வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டுக்கொண்டனர். அப்போது அமைச்சரையும், எம்பியை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின்பேரில் அவரை தள்ளிவிட்ட எம்பியின் உதவியாளர் விஜயராமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மோதல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் எம்பி நவாஸ் கனி, "3 மணி நிகழ்ச்சி என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நான் 2.50 மணிக்கே சென்றுவிட்டேன். ஆனால், நான் குறிப்பிட்டு இருந்த நேரத்துக்கு முன்பாகவே நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இதனை எனக்கு தெரிவித்து இருக்கலாமே என்றுதான் ஆட்சியரிடம் கேட்டேன். ராமநாதபுரம் புதிய ஆட்சியருக்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை. தலைமை செயலாளரிடம் அவர் மீது புகாரளித்து உள்ளேன். அமைச்சருக்கும் எனக்கும் மனக்கசப்பு இல்லை." என்றார்.
இதுகுறித்து ஐயூஎம்எல் மாநில செயலாளர் சிராஜுத்தீன் நேற்று முகநூலில் கண்டன பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!! நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வை துவக்கியது குறித்து கேள்வி எழுப்பிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களோடு ஆணவ உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசு விழாவில் அந்த தொகுதியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வருகை தருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு நிகழ்வை துவக்கிவிட்டு வேண்டுமென்றே ஆதரவாளர்களோடு மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையேல் திமுகவின் அணுகுமுறைக்கு வரலாற்றில் இது மிகப்பெரிய களங்கம் ஆகிவிடும்." என்று தெரிவித்து உள்ளார்.
திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே பிரியாமல் பல ஆண்டுகளாக இணைந்தே பயணித்து வருகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்றவரை வெவ்வேறு கூட்டணிகளில் போட்டியிட்டு உள்ளனர். அப்படி இருக்க இருவருக்கு இடையிலான இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications