ஏமாற்றிய ஸ்டாலின்.. அரசுக்கு எதிராக களமிறங்கும் அரசு ஊழியர்கள்! மார்ச் 23 ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று கூறி ஜாக்டோ - ஜியோ சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சங்கங்களை வைத்துள்ளனர். தங்களின் உரிமை மற்றும் கோரிக்கைகளை இந்த சங்கத்தின் மூலமாக துறை அமைச்சர், முதல்வர் ஸ்டாலினுக்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அமைப்பு ஜாக்டோ ஜியோ. இந்த அமைப்பில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ சார்பில் அடிக்கடி மாநிலங்களில் போராட்டங்கள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம், பணி வரன்முறை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வரப்பட்டது. சென்னை தலைமை செயலகத்திலும் போராட்டம் என்பது நடத்தப்பட்டது. அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் ஜாக்டோ-ஜியோ சார்பில் தற்போது புதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு சார்பில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி அவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் கூறுகையில், ‛‛தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23ல் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், மார்ச் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்'' என்று கூறியுள்ளார்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் இந்த கோபத்தின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக இணைந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். அதன்பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:‛‛ அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதற்கு முதல்வர் உங்களின் கோரிக்கையை கண்டிப்பாக அரசு பரிசீலனை செய்யும். அரசு மீது நம்பிக்கை வையுங்கள் என்று கூறினார். இதனால் வரும் பட்ஜெட்டில் எங்களின் கோரிக்கைக்கு சரியான உத்தரவாதம் வழங்கும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று கூறினார். ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் எதிர்பார்த்த அறிவிப்பு என்பது வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் வரும் மார்ச் 23ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ - ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications