நீ சிங்கம் தான்.. ஐபிஎல் லீக்கில் புலம்பவிட்ட சென்னை ரசிகர்கள்! பைனலில் புகழ வைத்த ஜடேஜா
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பியதை சுட்டிக்காட்டி அவர் புலம்பிய நிலையில், தன்னை புலம்ப வைத்தவர்களை புகழ வைத்து இருக்கிறார் ஜடேஜா.
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடந்து முடிந்தது. மழை தடங்கல்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்து 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த இறுதிப்போட்டி அகமதாபாத்தில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், நேற்று மழை பெய்தது. மழையால் போட்டி கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் குஜராத் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் சென்னை விளையாடியது.
இதில் டாஸ் வென்ற சென்னை கேட்பன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். குஜராத்தின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 39 ரன்களில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் ஆட்டமிழக்க, மறுபக்கம் தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த சஹா அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் குஜராத் அணி 214 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 4 பந்துகளை எதிர்கொண்டு இருந்தபோது மழை குறுக்கிட்டது.
சில மணி நேரம் கழித்து போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரஹானே, ராயுடு ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து வெற்றியை தேடித் தந்தார்.
சென்னை வெற்றிபெற்றவுடன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டாடியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. இதற்கு முன்னதாக லீக் போட்டிகளில் தோனி பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜடேஜாவை ஆட்டமிழக்க வேண்டும் என விரும்பினர். அவர் ஆட்டமிழந்தவுடன் ரசிகர்கள் மைதானத்தில் கோஷம் எழுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஜடேஜா இதனை சக வீரர்களிடமே புலம்பி இருக்கிறார். சென்னை அணி வீரர் தீபக் சஹார் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். "தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக விளையாடும் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என வேண்டுகின்றனர். இது என்ன மாதிரியான ஆதரவு?" என தங்களிடம் ஜடேஜா சொன்னதாக அவர் கூறியுள்ளார் இருந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ஜடேஜாவுக்கு மதிப்புமிக்க வீரர் என்ற விருதும் வழங்கப்பட்டது. அப்போது அதை வழங்கிய நிறுவனத்துக்கு நான் மதிப்புமிக்க வீரர் என்று தெரிகிறது என குறிப்பிட்டார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்து தந்தை புலம்ப வைத்தவர்களையே புகழ செய்து இருக்கிறார் ஜடேஜா.












Click it and Unblock the Notifications