ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ15 லட்சம் நேரில் வழங்கினார்
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் நாயகனான உண்மை பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ15 லட்சம் நிதி உதவியை நேரில் உதவி வழங்கினார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைகளைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு நடிகர் சூர்யா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப் பெற்றேன். 'ஜெய் பீம்' திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை, எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்ற வரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே.சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்

பார்வதி அம்மாளுக்கு உதவி
மேலும் மறைந்த ராஜாகண்ணுவின் துணைவியார் பார்வதி அம்மாளுக்கு, ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம் எனவும் சூர்யா தெரிவித்திருந்தார்.

பார்வதி அம்மாள் பேட்டி
அத்துடன், அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும் படி செய்யலாம் என எழுதி இருந்தார். இதனிடையே நடிகர் சூர்யா தம்மை எட்டி கூட பார்க்கவில்லை என்கிற வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பார்வதி அம்மாள் பேட்டி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

நேரில் அழைத்து விருந்து தந்த சூர்யா
இதனையடுத்து ராஜாக்கண்ணு பாத்திரத்தின் உண்மையான மனைவியான பார்வதியை தமது வீட்டுக்கு இன்று சூர்யா வரவழைத்து இரவு விருந்து உபசரித்து, நல உதவிகளை வழங்கினார்.

நிதி உதவியை வழங்கிய சூர்யா
மேலும் சூர்யா தரப்பில் ரூபாய் 10 லட்சமும் தயாரிப்பு நிறுவனம் என்ற முறையில் ரூபாய் 5 லட்சமும் மொத்தம் ரூ15 லட்சம் பார்வதி பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வைப்பு நிதி ஆவணங்களையும் நடிகர் சூர்யா, பார்வதி அம்மாளிடம் இன்று வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications