'நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட்..' ஜெய்பீம் சர்ச்சைக்கு நிஜ நாயகர் கோவிந்தன் தந்த பளீச் பதில்
சென்னை: ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனை அந்த படத்தில் வன்னியராக அடையாளம் காட்டப்படவில்லை என திடீரென ஒரு க்ரூப் கிளம்பியது. இதனிடையே தான் வன்னியர் இல்லை, கம்யூனிஸ்ட் எனச் சர்ச்சைகளுக்கு சூப்பர் பதிலடி கொடுத்துள்ளார் கோவிந்தன்.
இந்த மாத தொடக்கத்தில் தீபாவளி சமயத்தில் திரையரங்குகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வெளியான போதே நடிப்பு, கதைக் கரு, படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றுக்காக பலரும் புகழ்ந்தனர்.

சாதனைகளைப் படைக்கும் ஜெய் பீம்
மேலும், நிஜ வாழ்க்கையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியாக இருந்து ஒரு ரூபாய் கூட ஊதியமாகவே பெறாமல் வாதாடி நீதியை நிலைநாட்டித் தந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குறித்தும் பலரும் பாராட்டினர். காட் பாதர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களையும் பின்னுக்குத் தள்ளி, IMDB தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதல் இடத்தை உள்ளது. 10க்கு அந்த படத்திற்கு 9.6 வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சை
படம் வெளியானது முதலே ஜெய் பீம் திரைப்படம் பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தது. அவை கடந்த சில நாட்களாகப் பூதாகரமாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னியர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர். படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் குற்றம் செய்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையில் அக்னி கலசம் இருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது.

ரூ. 5 கோடி இழப்பீடு
காவல் நிலையத்தில் விசாரணை செய்ய அழைத்துச் செல்லப்பட்ட நபரை அடித்தே கொன்ற போலீஸ் அதிகாரிக்கு காதபாத்திரத்திற்கு அந்தோணி சாமி என்ற உண்மை பெயருக்குப் பதிலாக இயக்குநர் வேண்டுமென்றே குருசாமி என்று பெயரிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

கிளம்பிய புது சர்ச்சை
இந்த பிரச்சினையே இன்னும் ஓயாத நிலையில், உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன். இருப்பினும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனை அந்த படத்தில் வன்னியராக அடையாளம் காட்டப்படவில்லை என திடீரென ஒரு க்ரூப் கிளம்பியது. அவர்களுக்கு மிக சரியான பதிலடியைக் கோவிந்தன் கொடுத்துள்ளார்.
|
நான் வன்னியர் இல்லை கம்யூனிஸ்ட்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் கம்யூனிஸ்ட். என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லிச் சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! உங்கள் சாதியினர் உழைக்கும் இடத்தில் எவ்வளவு பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். அதைப் பேசுங்கள். அதைவிடுத்து ஜெய் பீம் படத்தை வைத்தோ என் சாதியைத் தேடியோ அரசியல் நடத்தாதீர்" என பளீச் எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெய்பீம் திரைப்படத்தில் நாயகனான உண்மை பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவும் வகையில் அவரது வங்கிக் கணக்கில் சூர்யா தரப்பில் ரூபாய் 10 லட்சமும் 2D தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ரூபாய் 5 லட்சமும் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications