சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளுக்கு சிறை
சென்னை: சென்னையில் ஜி.வி. பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். பிரபல தயாரிப்பாளரான இவர், இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஆவார். ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 29 வருடங்களாக நடந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்ப்போம்.
ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் 1989 இல் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் சசோதரர் ஜி. வெங்கடேஸ்வரன் என்பவரால் நிறுவப்பட்ட திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் "சுஜாதா பிலிம்ஸ்" என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தான் தளபதி, அஞ்சலி போன்ற படங்களை எடுத்தது. 2000கள் வரை பல்வேறு படங்களை தயாரித்தது. சில படங்களை விநியோகமும் செய்தது.ஆனால் கடன் அதிகமான காரணத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 1988 முதல் 1992 வரையிலான கால கட்டத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எனும் வங்கியில் பல கோடி கடன் பெற்றிருந்தது. போலி ஆவணங்கள் மூலம் இந்நிறுவனம் கடன் பெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. சி.பி.ஐ. விசாரணையில், இந்த குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.
மேலும், வங்கி அதிகாரிகள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு தங்கள் அதிகார வரம்பை விடவும், உத்தரவாதமாக அளித்த ஆவணங்களின் மதிப்பை விடவும் அதிகமாக கடன் அனுமதித்திருப்பது கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் என 9 பேர் மீது 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்கு பின்பு 9 பேர் மீதும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் 2003-ம் ஆண்டு வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று வங்கி அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் 4 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை 11-வது கூடுதல் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி வடிவேலு முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் அர்ஜூனன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேலு, வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த அபராத தொகையை செலுத்தாதபட்சத்தில் இந்நிறுவனத்தின் தற்போதைய பிரதிநிதியான அப்துல் ஹமீது என்பவர் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 29 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications