ஜாலியன் வாலாபாக் படுகொலை: 1000 பேரை கொன்ற டயர் இறந்தது எப்படி?பஞ்சாப் உத்தம்சிங் சுட்டு கொன்றாரா?
சென்னை: ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். இதன் பின்னணியில் பல ஆயிரம் பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி ஒரேநாளில் வெறும் 10 நிமிடங்களில் 1,000 பேரை நாம் பலி கொடுத்தது துயரமான சம்பவம் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை. 104 ஆண்டுகளுக்கு முன்பு 1919 ஏப்ரல் 13ல் நடந்த இந்த படுகொலையை ஆங்கிலேயரின் ஜெனரல் டயர் நிகழ்த்தினார். இவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா? இல்லை இந்தியரான உத்தம்சிங் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றாரா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததன் 104வது ஆண்டையொட்டி கடந்த 13ம் தேதி ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அப்போதும் கூட பலரும் ஜெனரல் டயரின் இறப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இவ்வாறு சந்தேகம் எழுப்பியவர்களுக்கு தெளிவான வகையில் விளக்கம் அளிக்கும் வகையில் தான் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது ஆயுதங்களை ஏந்திய இந்தியர்களை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் அறவழியில் போராட்டி பிரிட்டனுக்கு விரட்டி தான் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். இத்தகைய அகிம்சை வழி போராட்டத்தில் அத்துமீறி, கொடூரமான பல தாக்குதல்களையும், படுகொலைகளையும் ஆங்கிலேயர்கள் நிகழ்த்தினர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: இருப்பினும் உயிர் கொடுத்தேனும் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவோம் என்பதில் இருந்து நம் முன்னோர்கள் மட்டும் பின்வாங்கவே இல்லை. ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க இந்தியர்கள் விடுதலை வேட்கையுடன் ஒன்று திரண்ட காலம் அது. இதனால் சுதந்திரத்துக்காக ஒன்றிணையும் இந்தியர்களை விசாரணையின்றி சிறையில் அடைக்கும் வகையில் ரவுலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, நாடும் கடத்தப்பட்டனர். இந்த சட்டத்தை எதிர்த்து தான் 1919 ஏப்ரல் 13ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் பூங்காவில் மாபெரும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். தலைவர்கள் விடுதலை எண்ணத்தை விதைக்கும் வகையில் உரையாற்றினர். அப்போது தான் பெரிய படுகொலை சம்பவம் நடந்தது.
1000 பேர் படுகொலை: இந்தியர்கள் ஒன்றிணைந்ததை அறிந்த ஆங்கிலேய ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 100க்கும் அதிகமானவர்களுடன் வந்து முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பூங்காவில் இருந்து வெளியேற ஒருஒரு வழி மட்டுமே இருந்ததால் மக்களால் உடனே கலைந்து செல்ல முடியவில்லை. 10 நிமிடங்களில் ஆங்கிலேயர்கள் 1,650 குண்டுகளை சுட்டனர். உடலில் குண்டு பாய்ந்து ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வீரமரணம் அடைந்தனர். பலர் பாதுகாப்புக்காக கிணற்றில் குதித்து உயிரை இழந்தனர். இதில் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள், பெண்கள் என 1000க்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜாலியன் வாலாபாக் துயரத்தில் 379 பேர் மட்டுமே பலியானதாகவும், 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜெனரல் டயரின் இறுதிக்காலம்: டயர் இந்த சம்பவம் தான் இந்திய சுதந்திர போராட்டத்தின் வடிவத்தை மாற்றியமைத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அறவழி போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கிடையே தான் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கான சூத்திரதாரி ஜெனரல் டயர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். ராணுவ பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு டயர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் பேச முடியாத நிலையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கடந்த 1927 ஜூலை மாதம் 23ல் இறந்தார். இதுதான் வரலாற்று உண்மை.
உத்தம் சிங்: ஆனால் பலரும் டயரை இந்தியாவின் உத்தம் சிங் சுட்டுக்கொலை செய்ததாக கூறி வருகின்றனர். ஆம், இதுவும் உண்மை தான். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உத்தம் சிங்கின் வீரத்தை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது. ஏனென்றால் இவரும் இந்திய சுதந்திர போராட்டத்தின் வீர நாயகன் தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆங்கிலேயரான டயரை பிரிட்டன் சென்று அவர்களின் சொந்த நாட்டிலேயே சுட்டுக்கொன்றவர் தான் உத்தம் சிங். என்னங்க.. இது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ராணுவ அதிகாரியான ஜெனரல் டயர் பக்கவாதத்தால் இறந்துவிட்டாரே, அப்புறம் எப்படி மாவீரர் உத்தம் சிங் டயரை மீண்டும் சுட்டுக்கொல்ல முடியும்? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த கேள்விக்கான பதில் அடுத்து வருகிறது.
மைக்கேல் ஓ ட்வயர்: அதாவது ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13ல் குருவிகளை சுடுவது போல் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் அதிகமானவர்களை ராணுவ ஜெனரல் டயரும், அவரது சிப்பாய்களும் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பஞ்சாப்பின் லெட்டினென்ட் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ ட்வயர் (Michael O Dwyer, இவரை தான் டயர் என பலரும் நினைக்கின்றனர்), ஜெனரல் டயரை துப்பாக்கிச்சூட்டை வரவேற்றார். மேலும் ஜெனரல் டயரின் செயலுக்கு ஆளுநரான மைக்கேல் ஓ ட்வயர் பாராட்டு தெரிவித்து இருந்ததோடு, ஜெனரல் டயரின் செயல் சரியானது தான் என கூறினார். இதனால் ஆளுநர் மைக்கேல் ஓ ட்வயர் மீது இந்தியர்கள் கோபம் கொண்டனர்.

ஜாலியன் வாலாபாக் தொடர்பு: இதனால் மைக்கேல் ஓ ட்வயர் வீழ்த்த திட்டமிடப்பட்டது. இதனை சிறப்பாக செய்த புரட்சியாளர் தான் உத்தம் சிங். சீக்கியரான இவர் கடந்த 1899ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தார். இவரது பெயர் ஷேர்சிங். பெற்றோரை இளம்வயதில் இழந்த இவர் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்தார். அங்கு தான் உத்தம் சிங் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில் இவர் உத்தம் சிங் ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணியை செய்தார். இந்த சமயத்தில் தான் ராணுவ ஜெனரல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1000க்கும் அதிகமான இந்தியர்கள் பலியாகினர்.
பலிவாங்க முடிவு: இந்த சம்பவம் தான் உத்தம் சிங்கை கடுமையாக பாதித்தது. இந்தியர்களை சுட்டு வீழ்த்திய ஆங்கிலேயர்களுக்கு பாடம் புகட்ட அவர் முடிவு செய்தார். ஆங்கிலேயர்களை பழிவாங்க அமிர்தசரஸ் பொற்கோயிலில் சபதம் எடுத்த இவர் 1924ல் பகத்சிங் மற்றும் அவரது புரட்சிக் குழுவில் சேர்ந்து தீவிரமாக செயல்பட தொடங்கினார். மகாத்மா காந்தியின் அறவழி போராட்டம் ஒருபக்கம் நடக்க சிலர் அதிரடி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதற்கான ரிவால்வர்கள் மற்றும் வெடிமருந்துகளை உத்தம் சிங் வைத்திருந்தார். அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1931ல் விடுதலையான உத்தம் சிங் இந்தியாவில் இருந்து வெளியேறி ஜெர்மனி சென்றார். அங்கு வேலை செய்த அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்களை பலிவாங்க தொடர்ந்து முயற்சித்து வந்தார்.
லண்டனில் சுட்டுக்கொலை: அப்போது தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து சரியாக 21 ஆண்டுகள் கடந்த நிலையில் 1940 மார்ச் 13ல் பிரிட்டன் தலைநகர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் ஓ ட்வயர் உரையாற்றும் செய்தி உத்தம் சிங்கிற்கு கிடைத்தது. பஞ்சாப்பில் லெப்டினென்ட் ஆளுநராக இருந்து ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையை வரவேற்ற மைக்கேல் ஓ ட்வயர் வீழ்த்த சரியான சந்தர்ப்பம் கிடைத்ததாக எண்ணிய உத்தம் சிங் லண்டன் சென்றார். சிறுவயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரது நினைவில் வந்தது. துப்பாக்கியில் இருந்து சீறிவந்த தோட்டாக்கள் வயது, பாலின வித்தியாசமின்றி இந்தியர்களை வீழ்த்திய காட்சிகள் அவரது கண் முன் வந்து போயின. உத்தம் சிங்கின் கண்கள் சிவந்தது. சரியான தருணம் வர காத்திருந்த உத்தம் சிங் கூட்டம் முடிந்து வெளியே வந்த மைக்கேல் ஓ ட்வயர் துபாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
தூக்குத்தண்டனை: இதையடுத்து உத்தம் சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1940 ஜூலை 31ல் பென்டோன்வில் உள்ள சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார். 21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஈவு இரக்கமின்றி நடத்திய ராணுவ ஜெனரல் டயரின் செயலை பஞ்சாப்பின் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ ட்வயர் தான் உத்தம் சிங் சுட்டு வீழ்த்தி இந்தியாவின் விடுதலைக்காக தனது உயிரையும் தியாகம் செய்தார். இதனால் தான் உத்தம் சிங் இன்று வரை இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
திரைப்படங்கள்: உத்தம் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவரது துணிச்சல் மிகு சுதந்திர போராட்டத்தை வைத்தும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 1977 ல் ஜாலியன் வாலாபாக் என்ற பெயரிலும், அதே ஆண்டில் சாகீத் உத்தம் சிங் எனவும், அதன்பிறகு 2000ம் ஆண்டில் சாகீத் உத்தம் சிங் என்ற பெயரிலும், 2021ல் சர்தார் உத்தம் என்ற பெயரிலும் திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications