ஜேம்ஸ் வசந்தன் விஜய் மீது வீசிய "அத்திப்பழம்" விமர்சனம்.. பின்னணியில் திமுக? வெடித்த விவாதம்
சென்னை: பிரபல இசையமைப்பாளரும் சமூகப் பார்வையாளருமான ஜேம்ஸ் வசந்தன், தவெக தலைவரான நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்தபடியே உள்ளார்.. பல்வேறு காலகட்டங்களில் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் காரசாரமான விவாதங்களை கிளப்புவது வழக்கமாகும்.. அந்தவகையில் இப்போதும் ஒரு விவாதம் வெடித்து கிளம்பி உள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து தனது தொடக்கக்காலப் பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், "சினிமாத்துறையில் தனக்கு இணையாக இருந்து, பின்னாளில் அரசியலிலும் தனக்கு முன்பாகவே வளர்ந்து நின்ற உதயநிதி ஸ்டாலினுடன் இருந்த போட்டியையோ அல்லது கணக்குகளையோ தீர்த்துக் கொள்ளவே விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளாரா? உதயநிதிக்கு சவாலாக உருவெடுக்கவே அவர் கட்சித் தொடங்கியிருக்கக் கூடும்.

ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்
எந்தவொரு நீண்டகால சமூக அல்லது அரசியல் அனுபவமும் இல்லாமல் வெறும் சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரால் மக்கள் தலைவராக மாறிவிட முடியாது. விஜய்யின் இந்த முடிவு அவரது தனிப்பட்டப் போட்டி மனப்பான்மையால் உந்தப்பட்ட ஒன்றா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்" என்று கூறியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்த் இப்படி சொன்னதுமே, தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் கொந்தளித்து விட்டார்கள்.. "யார் அரசியலுக்கு வரவும் உரிமை உள்ளது? இதற்கெல்லாம் தேவையில்லாத நியாயத்தை கற்பிக்க கூடாது, இது காழ்ப்புணர்ச்சி" என்றெல்லாம் ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி தந்திருந்தனர்..
ஆனால், அப்போது முதல் நேற்றுவரை ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய நிலைப்பாட்டையும் விஜய் மீதான விமர்சனத்தையும் நிறுத்திக் கொள்ளவில்லை.. நேற்றுகூட பேட்டி ஒன்றில் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து அவர் மேலும் கடுமையாக பேசியிருக்கிறார்.
நினைச்சதைவிட மோசமான விஜய்?
"இப்பவும் என் கணிப்பு தவறாக இல்லை. நான் நினைத்ததை விட ரொம்ப மோசமாக விஜய் இருக்கிறார். அவரை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கவே கூடாது. கடந்த 3 மாதத்தில் அரசாங்கத்தில் என்ன நடந்திருக்கிறது? அதிகாரிகள் அவர்களுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பதால் எல்லாமே அப்படியாக போய்க் கொண்டிருக்கிறது. புதியதாக எதுவும் முன்னேறவில்லை.
இவருடைய ஆட்சி அத்திப்பழ புழு போற மாதிரி தான் இருக்கு. அத்திப்பழம் மலராக இருக்கும் போதே புழு உருவாகி விடும். அந்த புழு வாழ்க்கை அங்கேயே தொடங்கி அங்கேயே முடிஞ்சிடும். அதே மாதிரி தான் இந்த அரசும் உயிரோடு இருக்கு, ஆனா செயல்படவில்லை. யாருக்கும் எந்த பயனும் இல்லை." என்று விமர்சித்துள்ளார்.
ஜேம்ஸ் வசந்தனின் இந்த தொடர் நேரடி விமர்சனங்களுக்கு, ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. 3 மாத ஆட்சியில் தவெக செய்தது இதுதான் என்று, லிஸ்ட் போட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தவெகவினர் கொந்தளிப்பு
ஆனால் அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இது கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. "அரசியல் களத்தையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல், வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே ஜேம்ஸ் வசந்தன் இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறார்" என்று தவெக தரப்பினர் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இது திமுகவின் மறைமுகத் தூண்டுதலால் நடத்தப்படும் "அரசியல் பரப்புரை" என்றும் தவெக தங்கள் சந்தேகங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நடுநிலை பார்வை இதுவா
பொதுவாக சினிமாவில் இருந்து அரசியல் களத்திற்கு வரும் பிரபலங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுவது தமிழக அரசியலில் புதிதல்ல... ஒரு புதிய கட்சி தொடங்கும்போதோ அல்லது ஆட்சிப் பொறுப்பை எட்ட முயலும்போதோ, தலைவர்களின் ஒவ்வொரு நகர்வும் மிக நுணுக்கமாகக் கவனிக்கப்படும்.
ஜேம்ஸ் வசந்தன் எழுப்பியுள்ள கேள்விகள் ஒரு தரப்பு பொதுமக்களின் சந்தேகங்களை எதிரொலித்தாலும், அரசியல் அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் வெறும் தனிநபர் போட்டியாக மட்டுமே சுருக்கிப் பார்த்துவிட முடியாது...
அலர்ட் தேவை
ஜனநாயக அமைப்பில் மக்கள் அளிக்கும் ஆதரவும், ஒரு கட்சி களத்தில் ஆற்றும் தொடர்ச்சியான மக்கள் பணிகளும்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சுருக்கமாக சொன்னால், விமர்சனங்களை கடந்து தங்களின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்கள் மன்றத்தில் எந்தளவுக்கு தெளிவுபடுத்துகிறார்கள் என்பதில்தான் தவெக போன்ற புதிய அரசியல் சக்திகளின் வெற்றி அடங்கியுள்ளது.
விஜய் மீதான அவரது எச்சரிக்கை தேவையான ஒன்றுதான் என்றாலும், அவரது நோக்கத்தையும் எதிர்காலத்தையும் இப்பொழுதே தீர்மானிப்பது முழுமையான நடுநிலை பார்வையாக இருக்க முடியாது. அப்படியான வாய்ப்பு, வரவிருக்கும் தேர்தல் களத்திலும் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளிலுமே வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications