அமேசான் ஓடிடி தளம் கொடுத்த வார்னிங்.. ஜனநாயகன் படக்குழு உயர்நீதிமன்றத்தில் முன்வைத்த முக்கிய வாதம்!
சென்னை: ஜனநாயகன் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யவில்லை என்றால், அமேசான் ஓடிடி தளம் தரப்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். தற்போது சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், ஜனநாயகன் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
நடிகரும், தவெக தலைவருமான ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களிலேயே சென்சார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. இந்த நிலையில் சென்சார் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் மத மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சென்சார் தரப்பில், எங்களுக்கு பதில் மனு வழங்குவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று முக்கிய வாதம் வைக்கப்பட்டது.
அதேபோல் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் படத்தை பார்த்த உறுப்பினர் ஆட்சேபணை தெரிவித்ததால் தான் மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேட்காத ஒரு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் வாதிட்டுள்ளனர்.
அப்போது படக்குழு தரப்பில், ஜனநாயகன் படத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்ற பின், ஒரு வாரம் கழித்து ஆட்சேபணை தெரிவிப்பது நியாயமா? அமேசான் ஓடிடி தளம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யவில்லை என்றால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரித்து வருகின்றனர் என்று வாதிட்டனர்.
இப்படியான சூழலில் சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று வழக்கு மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளதால், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகலாம் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications