ஜனநாயகன் விஜய் இதுவரை வாயே திறக்கவில்லை.. அதுதான் சந்தேகமா இருக்கு.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி!
சென்னை: ஜனநாயகன் படம் ரிலீஸாகாத போதும், ஜனநாயகப்படி விஜய் வாயே திறக்காமல் மவுனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். விஜய்யை எப்படியாவது வளைத்துவிடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. சென்சார் சான்றிதழ் கோரி டிசம்பர் 18ஆம் தேதியே விண்ணப்பித்துவிட்ட சூழலிலும், சென்சார் தரப்பில் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸாவதற்கு 4 நாட்களுக்கு முன் மீண்டும் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்புவதாக படக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜனநாயகன் படக்குழு நீதிமன்ற படியேறிய போது, ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் இந்தியா முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரையரங்க உரிமையாளர்கள் திரும்ப கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதேபோல் நீதிமன்றம் யு/ஏ சான்றிதழ் அளித்த போது, சென்சார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போது ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி உள்ளிட்டோர் பாஜக மற்றும் சென்சார் போர்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிபிஎன் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், ஜனநாயகன் படத்தை எடுத்த தயாரிப்பாளர், நடித்த கலைஞர்கள், முதலீடு செய்தவர்கள்.. எவ்வளவு பேர் சம்மந்தப்பட்டிருப்பார்கள்.
இந்த படத்தின் நாயகன் யார் என்பது எனக்கு பிரச்சனையில்லை. தணிக்கை வாரியத்திற்கு படம் பார்ப்பதை தவிர வேறு வேலையே இல்லை.. இதில் கொடுமை என்னவென்றால் யு/ஏ சான்றிதழ் கொடுக்கலாம் என்று படம் பார்த்த 5 பேரில் 4 பேர் கூறுகிறார்கள். ஒரேயொரு நபர் மட்டும் புகார் கூறுகிறார். வழக்கமாக 100% 5 பேரும் ஒப்புக்கொண்டதால் தான் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று இல்லை.
இப்படி தணிக்கை வாரியம் நடந்து கொண்டால், திரையுலகம் பிழைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மத்திய அரசு, அரசியல் சூழலில் நிர்பந்தத்தை கொடுத்து விஜய்யை எப்படியாவது வளைத்துவிடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டி இருக்கிறது.
அதேபோல் இவ்வளவு தொந்தரவு செய்கிறார்கள், அநீதி இழைக்கிறார்கள் என்பது தெரிந்தும், ஜனநாயகன் ஜனநாயகப்படி வாயே திறக்கவில்லை. கருத்துரிமைக்கு எதிராக தணிக்கை வாரியம் இருக்கிறது, பாஜகவின் ஆயுதமாக சென்சார் இயங்குகிறது என்றெல்லாம் நாங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்மந்தப்பட்ட கதாநாயகன் வாயே திறக்காமல் மவுனமாக இருப்பது என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications