வன்மம்.. நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதற்கே வேதனை.. ஜவாஹிருல்லா காட்டம்!
சென்னை: தமிழ் மக்கள் படும் துயரை உணராமல் பாஜக-வின் வன்மத்தைப் பிரதிபலிக்கும் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதற்கு வேதனைப்பட வேண்டியுள்ளது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் அதில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வந்த நிலையில், தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், தென் மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தபோது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்தார் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வெள்ளத்தை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என்றும், அப்படிச் செய்வது வழக்கம் இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், மேலும், ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு, திமுக தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர், நிர்மலா சீதாராமனுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளனர். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் செயல்" என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்கள் படும் துயரை உணராமல் பாஜகவின் வன்மத்தைப் பிரதிபலிக்கும் இவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதற்கு வேதனைப்பட வேண்டியுள்ளது.
கடந்த ஒரு நூற்றாண்டில் காணாத மிக மோசமான பாதிப்பைத் தமிழ்நாடு சந்தித்து இருக்கிறது. வீடுகள் இடிந்தது, வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்தது, விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது, கால்நடைகள் இறப்பு என அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய அளவில் சேதாரத்தை தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் பிரதமரிடம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இது தமிழ்நாடு என்றால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி எப்போதும் ஓரவஞ்சனையாகவே செயல்படும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசின் இந்த இரக்கமற்ற நிலைபாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications