ஆகாசவாணி.. காலத்தால் மறக்க முடியாதவர் சரோஜ் நாராயணசுவாமி.. ஜவாஹிருல்லா ஆழ்ந்த இரங்கல்!
சென்னை: வானொலி செய்தி வாசிப்பில் தனி முத்திரை பதித்த சரோஜ் நாராயண சுவாமியின் மறைவு செய்தி தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது;

ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...' என்ற கணீர் குரலுடன், 1962 முதல், 50 ஆண்டுகள், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பணியாற்றி ஓய்வுபெற்ற சரோஜ் நாராயண சுவாமி தனது 87வது வயதில் உயிர் நீத்தார் என்று அறிந்து வருந்தினேன்.
வானொலி செய்தி வாசிப்பில் தனக்கென முத்திரை பதித்த தனி பாணியை அமைத்து கொண்டவர் சரோஜ் நாராயண சுவாமி.
எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைவெளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, குரல் கொடுத்தவர்.
தற்போதைய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் முன்னோடியாக இருந்த வானொலியில் இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதன்படி காலத்தாலும் மறக்க முடியாத குரல்.,.காற்றில் கலந்து வந்த அவருடைய குரல் செவிகளில் நிறைந்திருப்பதை போல, இனி நம் நினைவுகளில் நிறைந்திருப்பார்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications