''தலைவரிடம் பேசிட்டு சொல்றோம்''.. ஜவாஹிருல்லாவை கூல் செய்த டி.ஆர்.பாலு! மமகவுக்கு 1 தொகுதி?
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு இன்று காலை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விரைவில் நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புடன் அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ஜவாஹிருல்லா.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருப்பதை ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே செய்தியாகவும் வெளியிட்டிருந்தது. அதற்கேற்றவாறு ஜவாஹிருல்லாவின் காய் நகர்த்தல்களும் அமைந்திருந்தன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாரிவேந்தர் இப்போது பாஜக பக்கம் சென்றுவிட்டார். இதனால் அந்த ஒரு இடத்தை தங்களுக்கு திமுக ஒதுக்க வேண்டும் என எண்ணுகிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு இருப்பது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்று காலை நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கூட, கட்சியின் பலம் குறித்த புள்ளி விவரங்களை எடுத்து வைத்திருக்கிறார் ஜவாஹிருல்லா.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே திமுகவிடம் 1 சீட் கேட்டது மமக. ஆனால் அப்போது அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டது திமுக. அதனால் தான் இந்த முறை சீட் விவகாரத்தில் மமக இவ்வளவு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ஜவாஹிருல்லாவிடம் திமுக தொகுதி பங்கீட்டு குழு எந்த உறுதியும் கொடுக்காமல், தலைவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் எனக் கூறி ஜவாஹிருல்லாவை கூல் செய்திருக்கிறார் டி.ஆர்.பாலு.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூட ரெடி என்று ஜவாஹிருல்லா ஓபனாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் கூறியிருக்கிறார். இதனால் தான் சீட் இல்லை என்று வெட்டி பேசாமல், தலைவரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறோம் என திமுக தரப்பிலும் கூறப்பட்டிருக்கிறது. முஸ்லீம் லீக் கட்சி ஏணிச் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமதுக்கு அண்மையில் தமிழக ஹஜ் கமிட்டி குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications