மாற்றுத்திறனாளிகளின் தோளோடு தோள் நிற்போம்! உரிமைகள் காப்போம்! ஜவாஹிருல்லா வாழ்த்து!
சென்னை: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாற்றுத்திறனாளிகளின் தோளோடு தோள் நிற்போம், அவர்களின் உரிமைகள் காப்போம் எனக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம், 3ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ வழி வகுக்கும் வகையில் இன்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
''மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றநோக்கத்துடன் ஐ. நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் எனடிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
சமூகம் மற்றும் வளர்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் கட்டாயம் பேணப்பட வேண்டும். அவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கவும் மன அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நாம்அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தோளோடு தோள் சேர்ந்து இருப்போம்.
அவர்களுக்கு இருக்கும் உடல் தடைகள் மனத்தடைகள் பொருளாதாரத் தடைகள் நீங்கமுழு ஒத்துழைப்பு நல்கச் சூளுரைப்போம்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்திருந்த மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துச் செய்தியில், மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மாத பராமரிப்பு உதவித்தொகையை 2000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கியும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications