ஜெயலலிதா இந்துத்வா தலைவர் தான்.. கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார்.. தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ஜெயலலிதா ஒரு இந்துத்வா தலைவர்தான். அவர் கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார். அவர் இப்போது இருந்திருந்தால் அயோத்தி கோவில் சென்று ராமரை வழிபட்டு வந்து இருப்பார் என்று கூறியுள்ளார்.
தென்சென்னை பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகள் வேண்டும் என்றே, எதோ பிரித்தாளுகிறது போல பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

வரும் 4 ஆம் தேதி இதற்கான பதில் கிடைக்கும். ஏனென்றால் ஸ்டாலின் சொல்கிறார், மதவாதத்திற்கு எதிராக தீர்ப்பு வரும் என்று. இங்கு மதவாதமே இல்லை. மனித வாதம் தான் இங்கு இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாக நினைத்து அத்தனை திட்டங்களையும் செய்து வருகிறோம்.
பாரத பிரதமரை நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். ஆனால் அவரது திட்டங்கள் எல்லாம் மக்களை போய் சேர்ந்துவிட்டது. இதை நீங்கள் மறுக்கவே முடியாது. நாங்கள் எல்லாம் கொரோனாவை தாண்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடியால் தான். எனவே எங்கள் ஓட்டு மோடிக்கு தான் என்று அவர்கள் தெளிவாக சொல்கிறார்கள்.
பிரித்தாளும் அரசியல் தமிழகத்தில் தான் ஸ்டாலின் போன்றவர்களால் செய்யப்படுகிறதே.. மோடி செய்யவில்லை. பாரத பிரதமர் இதுவரை செய்த பிரசாரங்களில் எல்லாம் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் அந்தந்தந்த மாநில பிரச்சினைகளை பற்றி. ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் தான். அவர் கரசேவையை ஆதரித்தார். அவர் ஆதரித்த போது அதிமுக தலைவர்கள் எதிர்த்து இருக்கலாமே.
ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பால ராமரை வழிபட்டு வந்திருப்பார். மேலும் இந்தியாவின் பல நூறாண்டு கனவு நினவாகியிருக்கிறது என்று அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்து இருப்பார். அதிமுகவில் உள்ள தலைவர்களும் இதே கொள்கையில் தான் இருந்தார்கள்.
ஜெயலலிதா கர சேவையை ஆதரித்த போது இன்று எதிர்த்து பேசுகிறவர்கள் எல்லாம் அப்போது எதிர்த்து பேசினார்களா. இது குறுகிய வட்டம் இல்லை. பரந்த வட்டம். ஜெயலலிதாவை அவர்கள் குறுகிய வட்டத்தில் வைக்க நினைக்கிறார்கள். நாங்கள் பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என்பது தான் எங்களது கருத்து.
இந்துத்வா என்பதை அவர்கள் மத ரீதியாக ஒன்றை மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் இந்துத்வா என்பது வாழ்க்கை முறை என்று, இந்திய கலாசாரத்தில் பெரும்பான்மையானோர் பின்பற்றும் வாழ்க்கை முறை என்று சொல்கிறோம். இதை வைத்து ஜெயலலிதாவை இந்துத்வா தலைவர் என்கிறோம்.
ஜெயலலிதா எவ்வளவு ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.. சனாதானத்தை எதிர்க்கிறோம் என்று சொன்ன திராவிட முன்னேற்ற கழகத்தினர் எத்தனை பேர் ராகு காலத்திலும், எமகண்டம் நேரத்திலும் போய் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் என்று சொல்லட்டும். நாங்க என்னைக்கு வேட்புமனு தாக்கல் செய்தோமோ அப்போது தான் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
ஆன்மிக நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் நீங்கள் இதை எதிர்த்துவிட்டு அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள். அவர்கள் சொல்வது எல்லாம் போலி மதசார்பின்மை தான். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications