"ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான்".. சசிகலாவை சந்தித்த பிறகு டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: சசிகலாவை சந்தித்து விட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைகளை ஏற்படுத்தியதே திமுக தான் என்றும் கூறினார்.
சசிகலாவை சந்தித்த பிறகு டிடிவி தினகரன் சென்னை தி நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். அதுதான் உண்மை. என்னுடைய கருத்தும் இதுதான்.
ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை நான் முழுவதுமாக படிக்கவில்லை. ஊடகங்களில் வருவதைத்தான் பார்த்தேன்.

சர்ச்சைகளை ஏற்படுத்தியதே திமுக தான்
அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம் இது. ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைகளை ஏற்படுத்தியதே திமுக தான். ஆனால் விசாரணை ஆணையம் அமைக்க ஓ பன்னீர்செல்வம் காரணமாகி விட்டார். தமிழக அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். எதுவாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொள்வோம். வரும் காலத்தில் அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே எய்ம்ஸ் இங்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

போயஸ் கார்டன் நான் போகவில்லை
அப்போது, 2012-க்கு பிறகு சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்பு இல்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், '2011-ல் ஜெயலலிதா என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார். அதன்பிறகு 2016-ல் தான் மருத்துவமனையில் தான் நான் பார்த்தேன். இடைப்பட்ட ஆண்டுகளில் போயஸ் கார்டன் நான் போகவில்லை. இந்த கேள்விக்கு எனவே என்னைவிட சசிகலா பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்' என்றார்.

இறந்த தேதியில் குழப்பம் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், 'ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை. 4-ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான் சென்று பார்த்தபோது டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தியிருந்தனர். தீவிர மாரடைப்பு ஏற்பட்டதனாலும் எக்மோ கருவி பொருத்தியிருந்ததாலும் 24 மணி நேரம் பார்ப்போம் என்றும் நம்பிக்கை இருந்தால் 72 மணி நேரம் வரைக்கும் பார்க்கலாம் என்று டாக்டர்கள் பேசிக்கொண்டனர்.

இதுதான் எனக்கு தெரிந்த தகவல்
அடுத்த நாள் 24 மணி நேரத்தில் நம்பிக்கை இல்லாததால் ஜெயலலிதா இறப்பை அறிவித்தார்கள். இதுதான் எனக்கு தெரிந்த தகவல். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ இன்ஸ்டிடியூஷன் எய்ம்ஸ் அறிக்கையையே ஆணையம் நிராகரித்துள்ளது. இதுவே ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. சசிகலா சி வியஜபாஸ்கர் உள்பட இந்த ஆணைய அறிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக எதிர்ப்பு எடுப்பார்கள்' என்றார்.

மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது
சபாநாயகர் அப்பாவுவின் செயல்பாட்டினை கண்டித்து அ.தி.மு.க. தலைமையில் எடப்பாடி பழனிசாமி நாளை உண்ணாவிரதம் நடத்த இருக்கிறார்களே அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது. இதற்காக அவர் போராட்டம் அறிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. தங்களை காப்பாற்றி கொள்வதற்காகவே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications