ஜெயலலிதாவுக்கு என்ன பிரச்சினை...எனக்கு எதுவுமே தெரியாது - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று ஆஜராகி பதிலளித்தார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் சொந்த ஊரில் இருந்ததாகவும், அவரது உடல்நலத்தில் இருந்த பிரச்சினை பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 4 மாத கால சிகிச்சைக்குப் பிறகு அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

எய்ம்ஸ் மருத்துவர் குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆணையத்தில் விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆணையத்தின் விசாரணையானது கடந்த 7ஆம் தேதி தொடங்கியது . அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 7 ,8 ,15 தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு தலைசுற்றல் , மயக்கம் இருந்ததாகவும் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்திய போது ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஓபிஎஸ் ஆஜராக சம்மன்
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், 8 முறை ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் 9வது முறையாக அவருக்கு சமீபத்தில் சம்மன் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று 11:30 மணி அளவில் ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

எனக்கு எதுவும் தெரியாது
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம்தான். அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பல கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்றே பதில் அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவிற்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் கூறினார்.

சொந்த ஊரில் இருந்தேன்
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழா நடைபெற்ற போதுதான் ஜெயலலிதாவைக் கடைசியாக பார்த்தேன் என்றும் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது தான் சொந்த ஊரில் இருந்ததாகவும் மறுநாள்தான் ஊரில் இருந்து சென்னைக்கு வந்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி ஆஜராக சம்மன்
ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆறுமுக சாமி ஆணைய வழக்கறிஞரும், சசிகலா தரப்பு வழக்கறிஞரும் விசாரணை நடத்த உள்ளனர். 8 முறை ஆஜராகாமல் தப்பித்து வந்த ஓபிஎஸ் இந்த முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதே போல சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் இன்று காலை 10 மணி அளவில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலாவிற்கும் சம்மன்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டில் சசிகலா உடன் இளவரசியும் உடன் இருந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சசிகலா போலவே இளவரசிக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதனால்தான் இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் முடிந்த பின்னர் சசிகலா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி
கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications